
திரையுலகில் 50 ஆண்டுகள் :
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். “ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகள் என்பது மாபெரும் சாதனை. திரையுலகில் உள்ள அனைவரும் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“எனது கணவர் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், ரஜினிகாந்தின் 50வது திரைப் பயண ஆண்டு விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாடியிருப்பார்,” என்று உணர்ச்சி பூர்வமாக குறிப்பிட்டார்.
ரஜினிகாந்திற்கு வாழ்த்து :
” ரஜினிகாந்திற்கு கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.
திரையுலகினருக்கு அழைப்பு :
திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்” என பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் :
ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் 14ம் தேதி வெளியாகிறது.1975ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், 50 ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ரசிகர் ஆதரவால் உலகளவில் புகழ் பெற்று உச்சத்தில் இருக்கிறார். பிரேமலதாவின் இந்த அறிக்கை, தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறது.
=====