

சட்டசபை தேர்தல் - 2026
Premalatha Vijayakanth Speech at DMDK Manadu 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு போன்றவற்றில் கவனம் செலுத்த தொடங்கி விட்டன. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணியின் பாமக இடம் பெற்று விட்டன. திமுக கூட்டணியை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த கட்சிகளை தொடர்கின்றன.
பாமக, தேமுதிக - எந்த திசையில்...
ராமதாஸ் தலைமையிலான பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எந்தக் கூட்டணிக்கு செல்ல இருக்கின்றன என்பது தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ராமதாஸ் திமுக கூட்டணிக்கும், தேமுதிக அதிமுக அல்லது தவெக கூட்டணிக்கும் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
தேமுதிக மாநில மாநாடு
இந்தநிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் மாநில மாநாடு(DMDK Maanadu 2026) நடைபெற்றது. ஏற்கனவே, மாநாட்டின் போது கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0
மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உண்மையான கட்சி தேமுதிக
பின்னர் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “ தேமுதிக பற்றி இழிவாக யார் பேசினாலும், தேமுதிக தொண்டர்கள் பதிலடி தர தயாராக இருக்கிறார்கள். நாட்டுக்கும், தேசத்திற்கும் உண்மையாக உழைக்கும் கட்சி தேமுதிக.
தொண்டர்கள் காட்டும் கட்சியுடன் கூட்டணி
தேர்தல் வந்தால் எவ்வளவு சீட் பேரம் என்கிறீர்களே. நான் பேசுவேன், யாரிடம் பேசுவேன். எங்க மாவட்ட நிர்வாகிகளிடம், தொண்டர்களிடம் பேசுவேன். நாம் யாருடன் கூட்டணி வைக்க வேண்டுமென உங்ககிட்ட பேசுவேன். நீங்கள் யாரை விரல் காட்டுகிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்பதை நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்
தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக எங்கு கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சியமைக்க முடியும் என்று உறுதியாக சொல்கிறேன். ஏனென்றால் இது சாதி, மத இனத்திற்கு அப்பாற்ப்பட்ட கட்சி. அனைவரையும் சமமாக பார்க்கும் என்பதே நமது இறுதி கொள்கை.
வெற்றியே நமது இலக்கு
தேமுதிகவுக்கு இனி வெற்றி ஒன்றுதான் கொள்கை. மாவட்ட செயலாளர்கள் கூட்டணி தொடர்பாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். யார், யாருடன் கூட்டணி வைக்கலாம் என அவர்கள் எழுதி கொடுத்ததை நான் மட்டுமே பார்த்தேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டாச்சு. ஆனால் இந்த மாநாட்டில் அதை அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி. நான் ஏன் இதை சொல்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
யாருடன் கூட்டணி? - தை பிறந்தால் வழி பிறக்கும்
இன்றுவரை தமிழகத்தில் எந்த கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. நாமும் நன்கு ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். நான் கடைகோடி தொண்டர்களை பார்த்து கேட்கிறேன். இந்த மேடையில் நாம் அறிவிக்க வேண்டுமா?. நாம் இவ்வளவு நாளாக சத்ரியனாக வாழ்ந்து விட்டோம்,
மதிப்பவர்களுடன் கூட்டணி
இனி சாமர்த்தியமாக வாழ வேண்டும். நாம் நின்று யோசித்து அடிப்போம். தேமுதிக சாதாரண கட்சி இல்லை. நமக்கென்று ஒரு மரியாதை, கண்ணியம் உண்டு. அதையெல்லாம் யார் மதிக்கிறார்களோ, என் தொண்டர்களை யார் மதிக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி.
நமக்குரிய இடங்கள், தொகுதிகளை உரிய முறையில் பெற்று கடைகோடி தொண்டன் தலைநிமிர்ந்து நிற்கும் அளவில் கூட்டணி அமைப்போம். நமது முரசு எட்டுதிக்கும் வெற்றி முரசு” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
==============