

சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை என இரண்டு நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் மொத்த நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 75 ஆகும்.
தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 51 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 24 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதிதாக 15 நீதிபதிகள்
இந்த பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 15 பேரை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கே.கோவிந்தராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர்களாக பணியாற்றிய ரஜினீஷ் பதியால் மற்றும் என்.ரமேஷ்...
மாநில அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய ஜி.கே.முத்துக்குமார், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராகப் பதவி வகித்த எஸ்.ரவீக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றும் என்.திலீப்குமார்...
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.மனோகரன் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக பணியாற்றிய ஆர்.அனிதா, கே.அப்பாதுரை ஆகிய 10 பேரை நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதேபோல, மாவட்ட முதன்மை நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வரும் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன்...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி, மாவட்ட முதன்மை நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் சி.திருமகள், டி.லிங்கேஸ்வரன், கே.பாலதண்டாயுதம் ஆகிய 9 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
குடியரசு தலைவர் ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரையை ஏற்று,முதல்கட்டமாக வழக்கறிஞர்களான கே.கோவிந்தராஜன், ரஜினீஷ் பதியால், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, வழக்கறிஞர்களான எஸ்.ரவீக்குமார், என்.திலீப்குமார், இ.மனோகரன் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன், சி.திருமகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அல்லி ஆகிய 10 பேரையும் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
15 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
============