

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்ததால், நம் நாட்டிலும் அதன் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, கடந்த அக்டோபர் மாதம் 95,000 ரூபாயை எட்டியது.
ஏறுமுகத்தில் தங்கம்
அந்த மாதம் 21ம் தேதி தங்கம் சவரன், 97,600 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 12) காலை தங்கம் கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 12,250 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 98,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
உச்சம் தொட்ட தங்கம்
மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 12,370 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்து, 98,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றமில்லை.
சவரன் ரூ.99,680
இந்நிலையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460க்கு விற்பனை ஆகிறது.
அதிர்ச்சியில் பொதுமக்கள்
ஒரு சவரன் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து இருக்கிறது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,593 ஆக உள்ளது,18 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,400 ஆக உள்ளது.
வெள்ளி விலையும் அதிகரிப்பு
வெள்ளி ஒரு கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து ரூ.213 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,13,000 ஆகவும் உள்ளது. சர்வதேச விலையை பொருத்தே இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்தவதேச அளவில் வெள்ளியின் விலை உயரலாம், குறையலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொருத்தும் வெள்ளியின் விலை உள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, சர்வதேச விலை அப்படியே இருந்தால் வெள்ளியின் விலை அதிகளவில் உயரும்.
தங்கம், வெள்ளி விலை குறையாது
தங்கம் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்ட இருப்பது குறித்து, கருத்து தெரிவித்த நகை வியாபாரிகள், ”சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள், தங்கமாகவே உள்ளது. இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து, நம் நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது.
வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது என்கின்றனர்.
===========