

திரையுலகில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் :
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் உச்சத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப இவர் நடிக்கும் படங்கள் உலக அளவில் பேசப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த ’கூலி’ திரைப்படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரஜினியின் ’அபூர்வ ராகங்கள் - கூலி’ :
1975ம் ஆண்டு ’அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் இதுவரை 170 படங்கள் வரை நடித்து இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக, தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நபராக வலம் வருகிறார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான்.
திரையுலகில் 50 ஆண்டுகள் :
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நேற்றுடன் நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து :
பிரதமர் மோடியும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவொன்றில் அவர் கூறியிருப்பதாவது: “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது,
தலைமுறைகளை கடந்த நடிகர் :
அவரது நடிப்பில் பல்வேறு கதாபாத்திரங்கள் தலைமுறைகள் கடந்தும் மக்கள் மனங்களில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
==============