

Producer Archana Kalpathi appointed to the temple trustees selection committee: Tamil Nadu government issues G.O.!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்யும் மாநில அளவிலான குழுவில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் முக்கிய திருக்கோயில்களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாநில அளவிலான புதிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தலைவர் மற்றும் துணைத் தலைவர்
இந்தக் குழுவின் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகளும், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் கே. இராமநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி
இக்குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஏஜிஎஸ் (AGS) நிறுவனத்தின் தலைவருமான அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நடிகர் விஜய்யின் ‘பிகில்’, ‘கோட்’ (GOAT) உள்ளிட்ட பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குழுவின் இதர உறுப்பினர்கள்:
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. ப. இராசம்பத்
திருமதி. மா. சுமதி (எ) சுமதிஸ்ரீ
டாக்டர் த. வேல்முருகன்
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (பதவி வழி உறுப்பினர் / செயலர்)
இக்குழுவின் முதன்மை நோக்கம்
முக்கிய திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பரிந்துரைப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.
ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் பதவி சர்ச்சை
முன்னதாக, 'ஜன நாயகன்' படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவுக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
பணிநியமன ஆனையும்..விவாதங்களும் சர்ச்சையும்
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, தனது நட்பு வட்டாரங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் அரசுப் பொறுப்புகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த புதிய நியமனம் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
=====