

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து
சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் அமைய இருக்கின்றன.
நீண்டநாள் கனவு நிறைவேறுகிறது
குறிப்பாக, காரிடார்-4 (மஞ்சள் பாதை - Yellow Line) திட்டத்தின் கீழ் வரவிருக்கும் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை, சென்னையின் மேற்குப் பகுதிப் பயணிகளின் நீண்ட நாள் கனவை நனவாக்க உள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு
தினமும் பல மணி நேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இப் புதிய வழித்தடம் மிகப் பெரிய மாற்றத்தையும் நிம்மதியையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி - வடபழனி
பூந்தமல்லி பைபாஸில் தொடங்கி குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் வழியாக வடபழனியைச் சென்றடையும் இந்த வழித்தடம் சுமார் 14.6 கிலோமீட்டர் தொலைவைக் கொண்டது.
பயண நேரம் பாதியாக குறையும்
பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்குச் சாலை வழியே செல்ல நெரிசல் நேரத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாகிறது. கடும் போக்குவரத்தை நெரிசல் இருந்தால், 2 மணி நேரமும் பிடிக்கும்.
உயர்த்தப்பட்ட (Elevated) மெட்ரோ பாதையின் மூலம் பயணிகள் வெறும் 30 நிமிடங்களில் தங்கள் இலக்கை அடைய முடியும். பீக் அவர்சிலும் இதில் மாற்றம் என்பது இருக்காது.
ரூ.40 தான் கட்டணம்
பயணிகளின் வசதிக்காகக் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை நிர்ணயிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கொடுக்கும் வகையில் இருக்கிறது.
மக்கள் எளிதில் பயன்படுத்த ரயில் நிலையங்கள்
பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு நிலையமும் சுற்றியுள்ள பிரதான குடியிருப்புகள் மற்றும் தொழில் மையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், கரையாஞ்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உயர்த்தப்பட்ட நிலையங்கள் இப் பாதையில் அமைந்துள்ளன.
முக்கிய சந்திப்பாக மாறும் வடபழனி
வடபழனி ரயில் நிலையம் ஒரு முக்கிய இணைப்பு மையமாகச் செயல்படும். ஏற்கனவே இயங்கி வரும் முதற்கட்ட மெட்ரோ பாதையுடன் (பச்சை பாதை - Green Line) இப் புதிய பாதையை இணைக்க 'ஸ்கைவாக்' (Skywalk) வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, பூந்தமல்லி மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் மெட்ரோ ரயில் மூலம் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு விரைவாக பயணிக்க முடியும்.
நெரிசல் இல்லாத பயணம்
பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் போரூர்-வடபழனி சாலைகளில் ஏற்படும் தினசரி போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.
கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கான இணைப்பு
இப் பாதையைச் சுற்றிப் பல புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை போன்ற முன்னணி மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
மெட்ரோ சேவை மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.
போரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சொந்த வாகனங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, மெட்ரோவை நோக்கி மாற இத் திட்டம் பெரிதும் உதவும்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, காற்று மற்றும் சத்த மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மெட்ரோ ரயில் சேவை முக்கியப் பங்காற்றும்.
காரிடார் 4 திட்டம் பூந்தமல்லி பைபாஸோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் மேலும் பல முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி - லைட்ஹவுஸ் பெரிய திருப்புமுனை
முதற்கட்டமாகப் பூந்தமல்லி - வடபழனி பகுதி பயன்பாட்டிற்கு வந்தாலும், இதன் அடுத்த கட்டப் பணிகள் வடபழனியிலிருந்து கோடம்பாக்கம், பனகல் பூங்கா, நந்தனம் வழியாக லைட் ஹவுஸ் வரை நீட்டிக்கப்படவுள்ளன.
இதுவும் செயல்பாட்டிற்கு வரும் போது, சென்னையில் பயண நேரம் என்பது மிகவும் குறையும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் ஏற்படாது.
சென்னையின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார உயர்விற்கும் வலுவான அடித்தளமாக மெட்ரோ ரயில் சேவை அமையும்.
=========================