

தமிழக காங்கிரஸ் கமிட்டி
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் காங்கிரஸ், விஜய் வருகையால் இந்த முறை பேரத்தில் இறங்கியது, ராஜ்யசபா சீட், கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என முழக்கம் எழுப்பியது.
திமுகவை கடுப்பேற்றிய காங்கிரஸ்
இதனால், தேர்தல் அறிவிப்பு வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? அல்லது தவெக பக்கம் தாவுமா என்ற குழப்பம் நிலவியது. இரண்டாம் கட்ட காங்கிரஸ் தலைவர்களும் தவெக பற்றி பேசி திமுகவை வெறுப்பேற்றினர்.
ராஜ்யசபா சீட், 28 தொகுதிகள்
ஒருவழியாக ராகுல் காந்தியுடன் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்த, திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. ஒரு ராஜ்யசபா சீட், 28 சட்டமன்ற தொகுதிகள் என்று ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஏற்கனவே, காங்கிரஸ் வெற்றி பெற இடங்களில் 7 தொகுதிகளில் அதிருப்தி இருப்பதாக திமுக கூறியதால், வேறு தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுப் பெற்றது.
சீட்கள் விற்பனையா? பகீர் தகவல்
இங்கு போட்டியிட்டவர்கள் வேறு வழியின்றி வேறு தொகுதிகளுக்கு தேர்வாக வேண்டிய நிலை உருவானது. ஆனாலும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குழப்பம் நீடிக்கிறது.
சீட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஜோதிமணி வெடிகுண்டை வீச, பீட்சாவுக்கு அடித்து கொள்வதை போல காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு இருப்பதாக பிரவீன் சக்ரவர்த்தி தன் பங்கிற்கு விளாசினார்.
ரூ. 5 கோடி வரை சீட் விற்பனை?
நகரப் பகுதியில் உள்ள தொகுதி 5 கோடி வரையும், ஊரகப் பகுதியில் உள்ள தொகுதி 3 கோடி வரை விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டு, முன்தொகையாக 50 லட்சம் வரை சில தலைவர்கள் வாங்கி இருப்பதாக, காங்கிரசாரே குற்றம்சாட்டுகின்றனர். இது மேலிடம் காதுக்கும் எட்டி இருக்கிறது.
பட்டியலை கிழித்தெறிந்த ராகுல்!
28 தொகுதிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் ராகுல் காந்தி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு தொகுதிக்கு ஒரு பெயர் மட்டுமே இருப்பதால், கொந்தளித்த ராகுல் அந்தப் பட்டியலை கிழித்து எறிந்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு
ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம், புதிய பட்டியலை தயார் செய்து தருமாறு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி கட்டளையிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்தமுறை புதியவர்களுக்கு வாய்ப்பு
ராகுல் காந்தி டிக் செய்ய போகும் வேட்பாளர்களில் ஏற்கனவே போட்டியிட்ட பலருக்கு வாய்ப்பு இருக்காது என்றும் புதியவர்களுக்கு சீட் கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் தமிழக காங்கிரசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பாளர் அறிவிப்பு, மனுத்தாக்கல், கூட்டணி தலைவர்களின் ஆதரவை கோருதல், பிரசாரம் என பிரச்னைகளை வரிசை கட்டி நிற்கின்றன. 28 தொகுதிகளை போராடி பெற்ற காங்கிரஸ் வாகை சூட என்ன செய்யப் போகிறது என்பதே கேள்வியாக உள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
பொன்னேரி, பெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை,
ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம்,
சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில்,
இந்த முறை அதிமுகவை நேரடியாக 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எதிர்த்து களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
=====