
டெல்லியில் மோதும் ராமதாஸ், அன்புமணி :
Ramadoss vs Anbumani Issue : பாமகவில் வலுக்கும் தந்தை - மகன் மோதல் விவகாரம் டெல்லி வரை சென்று விட்டது. நிர்வாகிகள் நீக்கம், நியமனத்தில் ஏற்பட்ட பிரச்னை இன்று கட்சியின் சின்னம் வரை வந்து விட்டது என்றே கூறலாம்.
இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
அன்புமணி தலைமையிலான செயற்குழு கலைத்து விட்டு புதிய நிர்வாக குழுவை அமைத்த ராமதாஸ், அதன் கூட்டத்தை நடத்தினார். அன்புமணியை கண்டித்து செயற்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
யார் தலைவர் வலுக்கும் மோதல் :
கட்சியின் உண்மையான தலைவர் நான்தான், தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வில் தனக்கே அதிகாரம் என்பதில் ராமதாஸ்(Ramadoss) உறுதியாக நிற்கிறார். அதன் அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையத்தை நாடியுள்ள ராமதாஸ், அன்புமணியின் தலைவர் பதவி மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதாக முறையீடு செய்துள்ளார். தலைவர் பதவியை ராமதாஸ் எடுத்துக் கொண்டதாக தேர்தல் ஆணையத்தில் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மையான செயற்குழு எது? :
அதேசமயம் அன்புமணி தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடி 2026 ஜூன் மாதம் வரை தலைவர் பதவி உள்ளதாக மல்லுக்கு நிற்கின்றனர்.
ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டம் செல்லாது. செயற்குழு கூட்டம் போடுவதற்கு 15 நாட்கள் முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். ராமதாஸ் தரப்பினர் 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னர் அறிவித்துவிட்டு செயற்குழுவை கூட்டியுள்ளார் அது செல்லாது.
பாமக சட்டவிதி படி தலைவர் தலைமையில் தான் செயற்குழு பொதுக்குழு நிர்வாக குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தலைவரே இல்லாமல் நடத்தப்பட்ட செயற்குழு செல்லாது என்பது அன்புமணி(AnbumanI Ramadoss) தரப்பு வாதம்.
பாமகவின் மாம்பழச் சின்னம் :
ஒருவேளை இந்த சண்டை மேலும் வலுவடைந்து கட்சி இரண்டாக உடைந்தால், பாமகவின் மாம்பழச் சின்னம்(PMK Mango Symbol) முடக்கபடும் வாய்ப்பும் உள்ளது. இருவரும் பிடிவாத போக்குடன் நடந்து கொள்வதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் விரக்தியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
====