

ராமதாஸ் - அன்புமணி மோதல்
Ramadoss on PMK Party Mango Symbol : பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை - மகன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஸ்ரீகாந்தியை புதிய செயல் தலைவராக நியமித்து, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கி விட்டார்.
ஆனாலும், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மூன்று எம்எல்ஏக்கள் அன்புமணி மக்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்காக கடிதம் கொடுத்ததால் பாமக கொடி, சின்னம் தேர்தல் ஆணையத்தால் அன்புமணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
பாமக கொடி, சின்னம்
பாமக கட்சி மற்றும் சின்னத்திற்கு எந்தவித உரிமையும் கூறக்கூடாது என்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான பணிகள் இன்று தொடங்கின.
யாருக்கு மாம்பழச் சின்னம்
ராமதாசும், அன்புமணியும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருவதோடு, இருவரும் வேறுவேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அப்படி நடந்தால், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் மாம்பழ சின்னத்தை கைப்பற்றப் போவது தந்தையா, மகனா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘‘நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும். சட்டமன்றம், மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாம்பழ சின்னத்தில் தான் போட்டியிட்டுள்ளோம்’’ என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தீவிரம் - என்ன செய்வார் அன்புமணி?
பாமகவின் அடையாளம் என்பதே மாம்பழ சின்னம் என்பதால், அதனை கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டுள்ளார். இதனால் அன்புமணி தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மாம்பழச் சின்னம் முடங்க வாய்ப்பு!
இரு தரப்பும் மாம்பழ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினால் சிக்கல் எழும். உடனடியாக தீர்ப்பு எதுவும் வராது. சட்டமன்ற தேர்தலும் நெருங்கி விடும் என்பதால், வேறு வழியின்றி மாம்பழ சின்னத்தை முடக்கி விட்டு, இருதரப்புக்கும் வேறுவேறு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பாமகவின் நிலை என்ன?
பாமக இளைஞரணி தலைவர் நியமனத்தில் தொடங்கிய ராமதாஸ் - அன்புமணி மோதல், தற்போது கட்சியின் கொடி, சின்னம் வரை வந்திருக்கிறது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சமரசத்திற்கு வந்தால் மட்டுமே பாமகவின் எதிர்காலத்தை மீட்டெடுக்க முடியும், தேர்தலில் வெற்றி என்பது சாத்தியமாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
=====================