
உடையும் நிலையில் பாமக :
Advocate K Balu on Anbumani Ramadoss Removed From PMK : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையேயான மோதல், கட்சி இரண்டாக பிளவுபடும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. கட்சியில் யாருக்கு அதிகாரம்? என்பதில் தொடங்கிய போட்டி, நிர்வாகிகளை நீக்குதல், நியமித்தல், பொதுக்குழு, செயற்குழுவை தனித்தனியாக நடத்துதல் என வலுப்பெற்று இப்போது அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கும்(Anbumani Dismiss) நிலைக்கு வந்திருக்கிறது.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ் அவற்றுக்கு செப்டம்பர் 10ம் தேதிக்குள் விளக்கம் தர இறுதிக்கெடு விதித்து இருந்தார். ஆனால், எந்த பதிலும் இல்லாத நிலையில், கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கி இருக்கிறார் ராமதாஸ்.
இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகளை பார்ப்போம் :
* கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் இல்லை
* இருமுறை அவகாசம் கொடுத்தும் பதில் ஏதும் எழுத்துப் பூர்வமாகவோ, நேரில் வந்தோ விளக்கம் அளிக்கவில்லை.
* இதன்மூலம் 16 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.
* கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாத தான்தோன்றி தனமான செயல் மட்டுமின்றி, ஒரு அரசியல்வாதிக்கு தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார்.
* எனவே, அன்புமணி செயல்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
* கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவர் குந்தகம் விளைவிப்பதால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
* அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு முன்பு 3 முறை சொல்லியுள்ளேன். இப்போதும் சொல்கிறேன், அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம்.
* பாமக நான் தொடங்கிய கட்சி. இதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை.
+ எனது நடவடிக்கை பாமகவுக்கு பின்னடைவு கிடையாது. ஒரு பயிரிட்டால் அதில் களை முளைக்கத்தான் செய்யும். களை முளைக்குமே என்று யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. நாங்கள் களையை நீக்கி விட்டோம்” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் கிடையாது :
அன்புமணியை நீக்கிய சில மணி நேரத்தில் அவரது ஆதரவாளர் கே.பாலு அளித்த பேட்டியில்(PMK Advocate K Balu), “அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது. பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் மேற்கொள்ள முடியாது. அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.
பாமக தலைவர் அன்புமணி தான் :
பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும். ராமதாஸ் அறிவிப்பு பாமகவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. ஆகஸ்டு 9ல் மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணியின் பதவியை நீட்டித்து தீர்மானம்(PMK Leader Anbumani) போடப்பட்டது. பொதுக்குழு முடிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : Anbumani : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் : ராமதாஸ் அதிரடி
குழப்பங்களுக்கு முடிவு கிடைத்து விட்டது :
பாமகவின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும். உளவு பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை. அன்புமணி உளவு பார்த்திருந்தால் கட்சியில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது. இதுவரை பாமகவில் நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்து விட்டது. தேர்தல் நேரத்தில் முடிவுஎடுக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது.
==============