

பாமகவில் தீராத மோதல் :
PMK Leader Ramadoss vs Anbumani Fight Update : தந்தை, மகன் என்ற உறவை தாண்டி ராமதாஸ் - அன்புமணி மோதலில் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் சமாதானமாக போய் விடுவார்கள் என்று பாமக நிர்வாகிகள் நினைத்தபடி இனி நடக்காது என்ற நிலைக்கு மோதல் போய் நிற்கிறது. ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை, நிச்சயம் பாமகவின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றாது. மாறாக கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தான் கொண்டு செல்லும். பாமகவின் உண்மையான தலைவர் யார் என்பதில் நடைபெற்றும் வரும் மோதல், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பிரித்து விடும்.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் :
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி(PMK General Body Meeting) மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்தநிலையில், தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், அன்புமணி, பதிலளிக்க ஆகஸ்டு 31ம் தேதியை கெடுவாக நிர்ணயிக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஆக.31, விளக்கம் அளிக்க கெடு :
பாமக கட்சி(PMK Party Rules) விதிகளின் படி, அமைப்பு செயலாளர் அனுப்பும் நோட்டீசுக்கு பதலளிக்க வேண்டும். ஆகஸ்டு 31ம் தேதிக்குள் அன்புமணி தரப்பு, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஆவணங்கள் கைவசம் இருந்தால், அவற்றை நேரிலோ, கடிதம் வாயிலாகவோ சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாமகவில் விரிசல் மேலும் பெரிதாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
என்ன செய்யப் போகிறார் ராமதாஸ் :
31ம் தேதிக்குள் அன்புமணி(Anbumani) விளக்கம் அளிக்கா விட்டால் அல்லது தனது செயல்பாடு நியாயமானதே என வாதிட்டால், ராமதாஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டால் பாமக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் உருவாகும்.
மேலும் படிக்க : PMK : அன்புமணிக்கு எதிராக நோட்டீஸ் : சாட்டையை சுழற்றும் ராமதாஸ்
பாமக உடைய வாய்ப்பு :
இது வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பின்னடைவாக அமையும். வாக்கு வங்கி பிளவுபடும். தொண்டர்கள் குழப்பத்தில் வேறு கட்சிக்குள் தாவி செல்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ராமதாசும், அன்புமணியும் பேசி உட்கட்சி பூசலை சரிசெய்ய வேண்டும் என்பதே பாமக தொண்டர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இப்போதைய சூழலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெரிகிறது.
============