

பிளவுபட்டு கிடக்கும் பாமக
Ramadoss Reaction on PMK ADMK Alliance : தந்தை மகன் இடையேயான மோதலால் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அன்புமணி ஒரு பக்கமும், ராமதாஸ் ஒரு பக்கமும் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தலுல்லு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த மோதல் போக்கு கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாமக
இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமியை இன்று காலை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, அதிமுக கூட்டணியில் முறைப்படி இணைந்தார். தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே தங்களின் முக்கிய இலக்காக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ராமதாஸ் கடும் அதிருப்தி
பாமக பெயரில் அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது பற்றி அறிக்கை ஒன்றின் மூலம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கூட்டணி உடன்பாடு செல்லாது, செல்லாது
” பாமக சார்பாக அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது சட்டவிரோதம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அய்யா மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.
பாமக தலைவர் ராமதாஸ் தான்
17.12.2025 முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம்
மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
பேச்சுவார்த்தை சட்ட விரோதம்
அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி மருத்துவர் அய்யா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனு - ராமதாஸ் அழைப்பு
இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்ப மனுக்களை 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம். விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்றுக் கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அன்புமணி தரப்பில் சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட விரும்புவோர் இடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
=================