

Reliance FMCG Plant in Sipcot Allikulam Industrial Park in Thoothukudi : இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மற்றொரு முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளது. ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட், தனது அடுத்த பெரிய அலகுக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிறுவனம் சிப்காட் அல்லிக்குளம் தொழிற்பூங்காவில் ஒரு ஒருங்கிணைந்த உற்பத்தி அலகை அமைக்க ரூ.1,156 கோடி முதலீடு செய்யவுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
60 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அலகில் ஸ்நாக்ஸ், பிஸ்கட்கள், மசாலாப் பொருட்கள், ஆட்டா, உணவு எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தும். அடுத்த 5 ஆண்டுகளில் இது தமிழ்நாட்டில் 2,000 உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ், முன்னணி தேசிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்க்கிறோம். எந்தவொரு முக்கிய துறையையும் விட்டுவிடாமல் முன்னேறி வருகிறோம் என்று டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்திற்கு பெரும் உத்வேகமாக, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான கோச்சின் ஷிப்யார்டு லிமிடெட் மற்றும் மஸாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆகியவை, மாநிலத்தில் அதிநவீன கிரீன்ஃபீல்டு வணிகக் கப்பல் கட்டுமான தளங்களை அமைக்க ரூ.30,000 கோடி முதலீடு செய்யவுள்ளன.
மேலும் படிக்க : GST 2.0: வரி சீர்திருத்தம் புரட்சி, 375 பொருட்கள் விலை குறைகிறது
பாஜக தலைவர் அமித் மால்வியா இதை சமூக ஊடகப் பதிவில் பகிர்ந்து, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 55,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் புதுமைகளில் தமிழ்நாடு உலகளாவிய மையமாக உயரும் எனவும் குறிப்பிட்டார்.
இது வெறும் முதலீடு மட்டுமல்ல, வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் எதிர்கால வாய்ப்புகளின் அலை. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான ஆதரவு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.