

மூத்த தமிழ் எழுத்தாளர்
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணிக்கு வயது 79.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சொந்த ஊரில் இறுதிச் சடங்கு
எழுத்தாளர் பூமணியின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருடைய இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு
பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், கரிசல் வட்டார வாசகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு எழுத்தாளர்களும், திரையுலகினரும், வாசகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அரசுப் பணியில் பூமணி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் கடந்த 1947ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம் ஆகும்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், தனது வாழ்நாளை முழுமையாக இலக்கியப் பணிக்காக அர்ப்பணித்தார்.
கரிசல் இலக்கியத்தில் ஆளுமை
கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியல் யதார்த்தம், சமூக உறவுகள், சமூக அமைப்புகள் மற்றும் உழைப்பாளர்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் மிக ஆழமாகப் பதிவு செய்தவர் பூமணி.
பூமணி எழுதிய நாவல்கள்
இவர் எழுதிய 'பிறகு', 'வெக்கை', 'நைவேத்யம்', 'வரப்புகள்', 'வாய்க்கால்' போன்ற நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
சாகித்ய அகாடமி விருது
குறிப்பாக, இவரது புகழ்பெற்ற வரலாற்று நாவலான 'அஞ்ஞாடி' புத்தகத்திற்காக 2014ம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசின் உயரிய சாகித்திய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
சினிமாவில் முத்திரை பதித்தவர்
இலக்கியத் துறை மட்டுமன்றி, திரையுலகிலும் இவர் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளார். இவரது புகழ்பெற்ற 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டுதான், பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
‘அசுரன்’ மூலக் கதை பூமணி எழுதியதுதான். வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.
படம் இயக்கிய பூமணி
1996ல் 'கருவேலம்பூக்கள்' என்ற திரைப்படத்தையும் பூமணி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
இலக்கிய சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ் சங்க விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பூமணி பெற்றுள்ளார்.
பூமணி மறைவு, முதல்வர் இரங்கல்
தமிழ் எழுத்தாளர் பூமணியின் மறைவு, இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசு மரியாதையுடன் இறுதிப்பயணம்
அவரது இறுதிப் பயணம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
=============================