

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் மட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் நியமனம்
அதன் ஒரு பகுதியாக, தமிழக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் புதிய இயக்குநராக சந்தீப் ராய் ரத்தோர், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்பு
தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டு, இன்று பொறுப்பேற்கும் நிலையில் தற்போது சட்டம் - ஒழுங்கு டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு, சிறைத்துறை டிஜிபி என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் நியமனம்
முன்னதாக, தமிழக தேர்தல் நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் இவர் தமிழக டிஜிபியாகவும், காவல் படைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே. சங்கர் ஐபிஎஸ் சிபிசிஐடி - அமலாக்கத்துறைக்கு மாற்றம்
இதுவரை சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகப் பொறுப்பு வகித்து வந்த கே. சங்கர், ஐபிஎஸ் தற்போது நிலவும் காலிப்பணியிடத்தின் அடிப்படையில் சிபிசிஐடி - அமலாக்கத்துறை ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அவர் வகித்து வந்த சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதவியானது, தற்போது சந்தீப் ராய் ரத்தோரின் நியமனத்திற்காக 'டிஜிபி' அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டு இந்த அதிரடி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
=====