முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடையில்லை : நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் : திமுகவிற்கு பேரிடி! SC கண்டிப்பு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்கக் கோரிய திமுகவின் மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.
SC Dismisses DMK Plea Against CM Vijay Karur Visit
SC Dismisses DMK Plea Against CM Vijay Karur Visit google
2 min read

SC Dismisses DMK Plea Against CM Vijay Karur Visit

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரியும், பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்கக் கோரியும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகளின் அடுக்கடுக்கான காட்டமான கேள்விகளைத் தொடர்ந்து, திமுக தரப்பு வழக்கறிஞர் வழக்கை முழு சுதந்திரத்துடன் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

திமுக தொடர்ந்த வழக்கின் பின்னணி என்ன?

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

சாட்சிகள் பாதிப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய பேச்சு, வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களைப் பாதிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. எனவே அவர் மீது சிபிஐ உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

விஜய் கரூர் செல்ல தடை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவிருக்கிறார். அங்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிபிஐ அனுமதி

முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகள் சிபிஐ விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பாக சிபிஐ-யிடம் அனுமதி பெற உரிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும்.

கருத்து தெரிவிக்கத் தடை

சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும்.

நீதிமன்றத்தை அரசியல் களமாக்குகிறீர்களா? நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நோக்கில் அறிக்கைகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு கதையை உருவாக்குகிறார்கள்" என்று வாதிட்டார்.

இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி விஸ்வநாதன், திமுக வழக்கறிஞரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

முதலமைச்சரின் செய்தியைக் கூட உச்ச நீதிமன்றம் தான் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சை நீங்களே கவனியுங்கள். ]

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்கில், ஓர் அரசியல் எதிராளியின் அறிக்கையின் பேரில் உச்ச நீதிமன்றம் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்? கருணை அடிப்படையிலான நியமன உத்தரவுகள் வழங்குவது எப்படி ஒரு பிரச்னையாக இருக்க முடியும்? அதன் பின்விளைவு என்ன?

FIR -ல் முதல்வர் விஜய் இல்லை

கரூர் சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கைகளில் முதலமைச்சர் விஜய் குற்றவாளியாக இல்லை. இந்த நீதிமன்றத்தை ஒரு அரசியல் களமாக மாற்றுவதற்காக முயற்சி செய்கிறீர்களா? உங்கள் சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

வழக்கை வாபஸ் பெற்ற திமுக

நீதிபதிகளின் இந்த அதிரடி கேள்விகளைத் தொடர்ந்து, திமுக வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது, அதன் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டால்..." என்று கோரினார்.

மனுவைத் தள்ளுபடி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்

அதற்கும் மறுப்பு தெரிவித்த நீதிபதி விஸ்வநாதன், "உங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும். இந்த மனுவை நீங்கள் இங்கு வலியுறுத்தாமல் இருப்பதே நல்லது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து திமுக வழக்கறிஞர், "நாங்கள் முழு சுதந்திரத்துடன் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திட்டமிட்டபடி கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்

திமுகவின் மனுவை உச்ச நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளதால், வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதில் எந்தவித சட்ட சிக்கலோ, மாற்றமோ இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

திட்டமிட்டபடி கரூர் செல்லும் முதல்வர் விஜய், அங்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in