

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
Secondary Grade Teachers Protest in Tamil Nadu for 5th day, asking Equal Pay for Equal Work : இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கையை முன்வைத்து, ஐந்தாவது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் உள்ள பள்ளி கல்வித்துறை வட்டார கல்வி அலுவலகம் (BEO Office) முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம்
சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, 'சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்!' என உரத்த முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் நின்றபடி முழக்கம் எழுப்பினர். எழும்பூரில் வாகன ஓட்டிகள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஊதியத்தில் பெரிய முரண்பாடு
தொடர் போராட்டத்திற்கு முக்கியக் காரணம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் காணப்படும் முரண்பாடுதான். 2009ம் ஆண்டுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் சுமார் ரூ.8,370 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அதேசமயம், 2009ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அதே இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ₹5,200 ஆகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
ரூ.27,000 முரண்பாடு
ஆரம்பத்தில் ₹3,170 ஆக இருந்த இந்த அடிப்படை ஊதிய முரண்பாடு, தற்போதுள்ள அகவிலைப்படி (DA) மற்றும் பிற சலுகைகளுடன் சேர்த்து மாதத்திற்கு சுமார் ₹27,000 என்ற மிகப் பெரிய தொகையாக அதிகரித்துள்ளது.
ஒரே பணியைச் செய்யும் தங்களுக்கு ஒரே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தான் இந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அரசு அமைத்த குழு மௌனம்
ஆசிரியர்களின் இந்தப் பிரச்சினை குறித்துப் பரிசீலிக்க மூன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் உள்ள மூத்த அமைச்சர்கள், ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சில தினங்களுக்கு முன்பு பேசினர். இந்தக் கோரிக்கை குறித்து நிதித்துறைச் செயலாளரிடம் எடுத்துச் செல்வதாக அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பதில்தர மறுக்கும் அரசு
ஆனாலும், அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு சாதகமான அறிவிப்பும் வெளியாகவில்லை. குழுவும் எந்த முடிவையும் அரசுக்குத் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறது. இதன் காரணமாக ஆசிரியர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.
வாக்குறுதி மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு, ஆட்சிக்கு வந்ததும், முரண்பாடுகள் களையப்படும் என்று வாக்குறுதியும் அளித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்டது, ஆனால் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை என்ற குற்றச்சாட்டை வேதனையோடு முன்வைக்கின்றனர் இடைநிலை ஆசிரியர்கள்.
அரசிடம் நிதிப் பற்றாக்குறையா?
ஆசிரியர்கள் சுமார் 20,000 பேருக்கு அவர்கள் கேட்கும் ஊதியத்தை வழங்கினால், வருடத்திற்குத் தோராயமாக ₹178 கோடி முதல் ₹185 கோடி வரை சம்பளச் செலவு அதிகமாகும் என்று அரசு தரப்பில் கூறப்படுவதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 350 முதல் 450 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால், அந்தத் தொகையைக் கொண்டே தங்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்று ஆசிரியர்கள் வாதமாக இருக்கிறது.
தமிழக அரசுக்கு கோரிக்கை
அரையாண்டு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஆசிரியர்கள், சென்னையில் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குச் வரும் முன்பு தங்களை அழைத்து அரசு பேச வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
================