

பகுதிநேர ஆசிரியர்கள்
Part Time Teachers Salary Increased after Protest in Tamil Nadu : தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். உடற்கல்வி 3700 பேர், ஓவியம் 3700 பேர், கணினி அறிவியல் 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300, தோட்டக்கலை 20, கட்டிடக்கலை 60, வாழ்க்கைக்கல்வி 200 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
சம வேலைக்கு சம ஊதியம் - போராட்டம்
இவர்கள், போனஸ், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறத்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், ஓய்வூதியம் உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் பணிபுரிகின்ற தற்காலிக வேலையை நிரந்தரமாக்கவும், தற்போதைய ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை சம்பளமாக வழங்க வலியுறுத்தியும் ஜனவரி 8-ம் தேதி முதல் போராட்டத்தை சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நடத்தி வருகின்றார்கள்.
ஆசிரியர்கள் போராட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் ஓங்கி முழங்கி வந்தனர்.
ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆசிரியர்களுக்கான செலவினங்கள்
எஸ்எஸ்ஏ திட்டத்தில் ரூ.3,548 கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது. அனால் மத்திய அரசு அதைத் தொடர்ந்து தர மறுக்கிறது. எனினும் ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் உறுதுணையாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.
ஊதியம் ரூ.2,500 உயர்வு
தற்போது ஆசிரியர்களின் போராட்டம் எனக்கு கனத்த இதயத்தைத் தருகிறது என்று முதல்வரிடம் கூறினேன். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கான ஊதியம் மேலும் ரூ.2500 உயர்த்தப்படுகிறது.
மாதம் ரூ.15,000 சம்பளம்
அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் இனி மே மாதத்தில் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஊடே இத்தனை காலத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும். பணி நிரந்தரம் என்பது அவர்களின் பிரதான கோரிக்கை. அது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.
=============================