

பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் சுய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தற்காப்புக் கலைப் பயிற்சிகளை வழங்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது.
6 முதல் 10-ஆம் வகுப்பு வரை
நடப்பு கல்வியாண்டில், அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவிகளுக்கு இந்த சிறப்புப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கராத்தே, ஜூடோ, சிலம்பம், உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் இதில் கற்றுத்தரப்படும்.
நிதி ஒதுக்கீடு மற்றும் வகுப்புகள் விவரம்
பயிற்சி காலம்: ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இப்பயிற்சி நடைபெறும்.
நிதி உதவி: தற்காப்புக் கலைப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்கு தலா ரூ. 12,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வகுப்புகளின் எண்ணிக்கை: மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதனை மாதத்திற்கு 8 வகுப்புகள் வீதம் பிரித்து நடத்த வேண்டும்.
நேர அளவு: வாரத்திற்கு இரண்டு நாட்கள், ஒரு பாடவேளைக்கு ஒன்றரை மணி நேரம் வீதம் இந்த வகுப்புகள் திட்டமிடப்பட வேண்டும்.
பயிற்றுநர் ஊதியம்: தற்காப்புக் கலை பயிற்றுநர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 4,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயிற்றுநர்கள் தங்களின் மீது எந்தவித குற்றவியல் பின்னணியும் இல்லை என்பதற்கான சான்றிதழை காவல் நிலையத்திலிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
பயிற்சி வகுப்புகளைத் தடையின்றி நடத்த சில முக்கியக் கட்டுப்பாடுகளையும் கல்வித்துறை விதித்துள்ளது. அதன்படி, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 10 மாணவிகள் முதல் அதிகபட்சமாக 100 மாணவிகள் வரை மட்டுமே ஒரு பிரிவில் தற்காப்புக் கலை பயிற்சி பெற வேண்டும்.
இந்த வகுப்புகளில் தற்காப்புக் கலைகளுடன் சேர்த்து மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை சொல்லித்தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண் ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் மட்டுமே இந்த வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பெற்றோர் அனுமதி கட்டாயம்
தற்காப்புக் கலைகளில் சேர விருப்பமில்லாத மாணவிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், பயிற்சியில் பங்கேற்க பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கலாம். அதே சமயம், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு இப்பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
முதன்மைப் பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை
தற்காப்புக் கலைக்குத் தேவையான உபகரணங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் வாங்கிக் கொள்ளலாம் என முதன்மைப் பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====