

Senthil Balaji Anticipatory Bail Plea In TVK MLA Horse Trading Case
தவெக எம்.எல்.ஏ-விடம் சட்டப்பேரவை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி மனு
தனக்கும் இந்த குதிரை பேர விவகாரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் செந்தில் பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி: தவெக எம்.எல்.ஏ-விற்கு மிரட்டல்?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ-வான இளையராஜாவை ஒரு கும்பல் தொடர்புகொண்டு பேசியுள்ளது.
பேரவைத் தலைவருக்கு எதிராக
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தி, அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி தருவதாக அந்த கும்பல் பேரம் பேசியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ.வை மிரட்டியதாக புகார்
மேலும், இந்த குதிரை பேர விவகாரத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று அந்த கும்பல் எம்.எல்.ஏ இளையராஜாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 பேர் கைது – செந்தில் பாலாஜிக்கு தொடர்பு?
இந்த வழக்கை விசாரித்த திருவல்லிக்கேணி காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களான கரூரைச் சேர்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர் கார்த்தி, நிதி நிறுவன உரிமையாளர் அதிபன் ரமேஷ் உட்பட 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினருக்கு தகவல்
இந்த விசாரணையில், கைதான கும்பலை பின்னணியில் இருந்து இயக்கியது திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் என்பது தெரியவந்ததாகப் காவலதுறைனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தற்போது தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போலீஸ் சம்மன் புறக்கணிப்பு & லுக் அவுட் நோட்டீஸ்
கடந்த சனிக்கிழமை கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற திருவல்லிக்கேணி போலீசார், செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கினர். ஆனால், அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்கிடையே, அவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி
காவல்துறையினர் தங்களைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு தன் மீது திட்டமிட்டே சுமத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
======