

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
Tamil Nadu Part Time Teacher Death by Suicide News Tamil : சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ (DPI) பள்ளிக்கல்வி வளாகத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வாக்குறுதி எண் 181-ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி தொடர் போராட்டம்
தற்போதைய தொகுப்பூதியமான 12,500-லிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் 181 என எழுதியும், குடுகுடுப்பைக்காரர் போல வேடமிட்டும், வில்லுப்பாட்டு பாடியும் தங்களின் கோரிக்கைகளை நூதன முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கைது
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை அங்கிருந்து வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்திருந்தனர்.
விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
அப்போது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் தொடர்ந்து மன உளைச்சலுடன் இருந்ததாக தெரிகிறது. அவர் திடீரென வார்னிஷை குடித்து தற்கொலை முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக இடைநிலை ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசிரியர் கண்ணன் உயிரிழப்பு
ஆனால் சிகிச்சை பலனின்றி, ஆசிரியர் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சக ஆசிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தருவதாகவும், மே மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
சம வேலை, சம ஊதியம், பணி நிரந்தரம் என்பதே பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
================
(வாசகர்களின் கவனத்திற்கு : தற்கொலைக்கு முயல்வது எந்த பிரச்சினைக்கும் தீர்வாக இருக்க முடியாது. அத்தகைய எண்ணத்தை கைவிட வேண்டும். அதையும் மீறி தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)