

14ம் தேதி வரை எஸ்ஐஆர் பணிகள்
2002ம் ஆண்டுக்கு பிறகு கடந்த மாதம் நவம்பர் 4ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, வரும் 14ம் தேதி வரை திருத்த பணிகள் நடைபெற இருக்கின்றன. வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை 14ம் தேதி வரை கொடுக்கலாம்.
19ல் வரைவு வாக்காளர் பட்டியல்
வரைவுத் தேர்தல் பட்டியல் வரும் 19ம் தேதி வெளியிடப்படும். பணிகளை முடிப்பதற்காக, 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
100% கணக்கீட்டு படிவங்கள்
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,46,069 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் 100% விநியோகிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விநியோகிக்கப்பட்ட படிவங்களில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 வாக்காளர்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்து 100% நிறைவு அடைந்துள்ளது.
விண்ணப்பம் 6ம் எண் படிவம்
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம் 6ஆம் எண் படிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
74 லட்சம் பெயர்கள் நீக்கம்?
இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியல் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் இடமாற்றம் அடைந்தவர்கள் 40 லட்சம் வரை உள்ளனர்.
30 லட்சம் பேர் இறந்தவர்கள்
30 லட்சம் வரை இறந்தவர்கள் பெயர் உள்ளதாகவும் தெரிகிறது. இரட்டைப் பதிவு 4 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதில் இடமாற்றம் அடைந்து நீக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் 6 படிவத்தை பயன்படுத்தி புதிதாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 75,035 வாக்குச்சாவடிகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல் பணியை மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் எண்ணிக்கை 1200க்கும் மேல் இருந்தால் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல் உள்ளிட்ட மறுசீரமைப்புக்குப் பிறகு தமிழகத்தில் 75,035 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன.
=======================