

மேகேதாட்டு அணை விவகாரம்
மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்திற்கு வரும் ஆபத்துகள் குறித்து பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி, சட்டசபையில் விரிவாக தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
காவிரியில் கிடைக்கும் நீர்
”ஆண்டுக்கு 750 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வருகிறது. அதில் கர்நாடகவுக்கு 285 டிஎம்சி க்கு மட்டுமே உரிமை. ஆனால், தமிழகத்திற்கு 404 டிஎம்சிக்கு மேல் உரிமை இருக்கிறது.
அது குறைந்து குறைந்து இப்போது 175.25 டிஎம்சியாகவும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சி, கேரளாகவுக்கு 30 டிஎம்சி தர வேண்டும். தமிழகத்திற்கான தண்ணீரை மாதம் மாதம் அட்டவணை போட்டு கொடுத்திருக்க வேண்டும்.
நீர்தர மறுக்கும் கர்நாடகா
ஆனால், இதுவரை அப்படி தரவில்லை. ஜூன் மாதம் 9.18 டிஎம்சி தண்ணீரைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 2 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்து விட்டது கர்நாடகம்.
ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், 1 டிஎம்சிக்கும் குறைவான தண்ணீரே கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கிறது.
எதையும் மதிக்காத கர்நாடக அரசு
சட்டத்தையோ, தார்மீக நடவடிக்கையையோ, காவிரி ஆணையத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவே இல்லை. அதனால் தான் குறுவை சாகுபடியும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரியில் வருவது உபரிநீர் தான்
வயநாட்டில் பலத்த பெய்த மழையால் கபினியின் அணை நிறைந்ததால் உபரி நீரைத்தான் ஆடிப்பெருக்கன்று திறந்துவிட்டிருக்கின்றனர் என்று கூறினார்.
மேகேதாட்டு - தமிழகத்துக்கு பேராபத்து
மேகேதாட்டு அணையை தமிழ்நாட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில்தான் கர்நாடக அரசு கட்டப்போகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி எல்லையிலேயே 4 கி.மீ. தொலைவில் மேக்கேதாட்டு அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கின்றனர்.
தண்ணீரை முழுமையாக சேமிக்க சூழ்ச்சி
ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், கர்நாடகா இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
வரக்கூடிய தண்ணீர் அனைத்தையும் அனைத்து அணைகளிலும் சேமித்துவிட்டு, மேகேதாட்டுவில் 70 டிஎம்சி நீரையும் சேமித்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அணை கட்டுகின்றனர்.
இயற்கை சந்திக்கும் பேராபத்து
அணை கட்டப்பட்டால் 3 வனவிலங்கு சரணாலயங்கள் அணைக்கு கீழே சென்றுவிடும். 12,500 ஏக்கர் காடுகள் அழிந்துவிடும். இதன் மூலம், 700 ஆண்டுகள் பழைமையான நீர்மருந்து மரங்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும்.
நீர்நாய், 4 கொம்பு மான் போன்ற அனைத்தையும் அழித்துவிட்டுத்தான் மேக்கேதாட்டு அணையைக் கட்டவுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
அணை கட்டவே கூடாது
எனவே, அணை கட்டப்படுவதை நாம் நிறுத்த வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, நாம் அனைவரும் ஒத்த முடிவோடு டெல்லிக்கு செல்ல வேண்டும், “ என்று சௌமியா அன்புமணி பேசினார்.
========================