

வேளாண் பட்ஜெட் - விவாதம்
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, ரேஷன் கடைகள், ரேஷன் அரிசி தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் ரேஷன் பொருட்களின் தரம் மோசமாக இருந்ததாகவும், தற்போது தரமான அரிசி வழங்கப்படுவதாகவும் தவெக உறுப்பினர்கள் பேசினர், இதற்கு திமுக எம்எல்ஏக்கள் பதில் அளித்தனர்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது...
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், 1984ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்ஜி. ராமச்சந்திரன்.
ரேஷன் கடையில் எம்ஜிஆர்
”1984ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல்வர் எம்ஜிஆருடன் ஒரு காரில் கே.கே. நகர் வழியாக சென்று கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அது ரேஷன் கடை என்றும், வில்லிவாக்கம் தொகுதியின் கீழ் வருவதாகவும் முதல்வரிடம் தெரிவித்தேன். உடனே காரை நிறுத்தச் சொன்ன முதல்வர், ரேஷன் கடைக்குள் சென்று, அங்கிருந்து ஸ்டூலில் அமர்ந்து கொண்டார்.
ரேஷன் கடையில் முழுமையாக ஆய்வு
மக்களுக்கு வழங்கப்படும் அரிசியை காண்பிக்க சொன்னார். தரத்தை சரி பார்த்தார். எடை பற்றி கேட்டறிந்த முதலமைச்சர், கடைக்குள் சென்று ஆய்வு செய்தார்.
முதல்வர் ஆய்வு - மக்கள் மகிழ்ச்சி
கடையை ஒழுங்கா திறக்கிறார்களா? பொருட்கள் நன்றாக இருக்கிறதா என, பொதுமக்களை நோக்கி கேட்டார். அவர்களும் எல்லாம் நன்றாக இருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.
திரும்ப, திரும்ப ஆட்சிக்கு வருவோம்
ஆய்வு முடிந்து காரில் வரும் போது என்னிடம் பேசிய முதல்வர், ” இது (ரேஷன் கடை) ஒழுங்கா இருக்கும் வரை நாம் திரும்ப, திரும்ப ஆட்சிக்கு வருவோம் என்று என்னிடம் முதல்வர் கூறினார்.
எனவே, பேரவையில் ரேஷன் கடைகள் பற்றி பேசும்போது, அந்தச் சமபவம் நினைவுக்கு வருவதாக, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.
======================