

வேளாங்கண்ணி பேராலயம்
உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது.
லட்சக்கணக்கானோர் வருகை
திருவிழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவிழா காலங்களில் ஏற்படும் கடும் பயணியர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களின் தடையற்ற வசதியான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் தென்னக ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க தீர்மானித்துள்ளது.
ரயில்கள் நீட்டிப்பு
காரைக்கால் மற்றும் தஞ்சாவூர் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் (DEMU) எண் 76803 சேவை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு புதிய ரயில் எண் 06861 ஆக இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது தஞ்சாவூர் சந்திப்பில் இருந்து இரவு 21:10 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினமே இரவு 22:10 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பை சென்றடையும். இந்த நீட்டிக்கப்பட்ட சேவையானது வரும் ஆகஸ்ட் மாதம் 29, 31 மற்றும் செப்டம்பர் மாதம் 01, 02, 03, 04, 05, 07, 08 ஆகிய தேதிகளில் செயல்படும்.
திருச்சி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
திருச்சிராப்பள்ளி மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 06866 கொண்ட திருச்சிராப்பள்ளி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 08 வரை தினமும் இரவு 22:50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 02:40 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06863 கொண்ட வேளாங்கண்ணி - தஞ்சாவூர் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 09 வரை தினமும் அதிகாலை 03:00 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு காலை 05:15 மணிக்கு தஞ்சாவூர் சந்திப்பை வந்தடையும்.
8 பெட்டிகளோடு ரயில்கள் இயக்கம்
இந்த ரயில்கள் அனைத்தும் 8 பெட்டிகளைக் கொண்டு இயங்கும். இவை நாகப்பட்டினம் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, கொரடாச்சேரி, நீடாமங்கலம் சந்திப்பு, தஞ்சாவூர், பூதலூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் இருமார்க்கமாகவும் நின்று செல்லும்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் மெமு ரயில்கள்
விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு மெமு (MEMU) விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண் 06133 கொண்ட விழுப்புரம் - நாகப்பட்டினம் மெமு விரைவு சிறப்பு ரயில், திருவிழாவின் முக்கிய நாட்களான ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 08 ஆகிய தேதிகளில் காலை 09:10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 13:05 மணிக்கு நாகப்பட்டினம் சந்திப்பை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06134 கொண்ட நாகப்பட்டினம் - விழுப்புரம் மெமு விரைவு சிறப்பு ரயில் அதே தேதிகளில் பிற்பகல் 13:20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மாலை 17:30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.
8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரயிலானது பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் போர்ட் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேரளம் சந்திப்பு, திருநள்ளாறு, காரைக்கால் மற்றும் நாகூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றம் மற்றும் கொடியிறக்கம்
வேளாங்கண்ணி பெருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளான கொடியேற்றம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறும் நாட்களில் பக்தர்களின் பெரும் கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு, வேளாங்கண்ணி - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 29 கொடியேற்ற இரவிலும் செப்டம்பர் 08 கொடியிறக்க இரவிலும், ரயில் எண் 06865 கொண்ட வேளாங்கண்ணி - திருச்சி சிறப்பு ரயில் இரவு 21:20 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00:45 மணிக்கு திருச்சியை அடையும்.
மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 09 ஆகிய தேதிகளில் அதிகாலை 01:00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் எண் 06864 சிறப்பு ரயில் அதிகாலை 04:15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
6 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்கள் நாகப்பட்டினம், திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மற்றும் மஞ்சத்திடால் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
==============