

சபரிமலை ஐயப்பன் பூஜை
Chennai To Kollam Special Train Visit Sabarimala : வரும் 17ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில், அன்றைய தினம் மண்டல பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தொடங்குகின்றன. 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 17ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
விரதம் தொடங்கும் பக்தர்கள்
கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். எனவே, பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள்
இந்த ரயில்கள் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு வண்டி எண் 06127 என்ற சிறப்பு ரயில், வரும் 20 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு மறுநாள் அதிகாலை 4.57 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம் வழியாக மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில்
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வண்டி எண் 06128 என்ற சிறப்பு ரயில் வரும் நவம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொல்லம் ரயில் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு அடுத்த நாள் அதிகாலை 5.07 மணிக்கு வந்து சேரும். சேலத்தில் இருந்து கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தடையும்.
சனிக்கிழமையும் சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு வண்டி எண் 06117 என்ற மற்றொரு சிறப்பு ரயில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.57 மணிக்கு சேலம் வந்து சேரும். சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு வண்டி எண் 06118 என்ற சிறப்பு ரயில் நவம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு மறுநாள் காலை 5.07 மணிக்கு வந்து சேரும். சேலத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்
சபரிமலை சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சபரிமலை சீசன் நெருங்கி வருவதால், பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தென் தமிழக பக்தர்களுக்கு பயனளிக்கும்
சேலம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும். குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஐயப்ப பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் இருந்து பயணிக்கும் பக்தர்களுக்கும் இந்த ரயில்கள் பயனுள்ளதாக அமையும். கேரள மாநிலத்தின் பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
==============