

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக உதயநிதி மீது குற்றம் சாட்டப்பட்டது, தவெகவினர் அளித்த புகாரின் பேரில், தஞ்சை போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை விரைந்தனர்.
உதயநிதியிடம் விசாரணை
நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற அவர்கள், பின்னர் விசாரணைக்காக அவரை தஞ்சாவூருக்கு வேனில் அழைத்து சென்றனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே பதற்றம் நிலவியது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சபரீசன், கட்சியின் சட்டத் துறை நிர்வாகிகள் உட்பட பலர் உதயநிதி இல்லத்தில் குவிந்ததால் பரபரப்பு கூடியது.
உதயநிதி ஸ்டாலின் கைது
புகாரின் அடிப்படையில், 9 பிரிவுகளின் கீழ் உதயநிதிக்கு எதிராகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். காலை 10.30 மணிக்கு மேல் போலீசார் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்து வேனில் ஏற்றினர்.
போலீசாருடன் திமுகவினர் தள்ளுமுள்ளு
உதயநிதியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய திமுகவினர், அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். வாகனத்தின் முன்பாக சாலையில் படுத்தும் மறியல் செய்தனர். இதனால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல்வேறு இடங்களில் திமுகவினர் கைது
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
தவெகவினரும் போராட்டம்
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து தவெகவினர் வடக்கு கடற்கரை மற்றும் பரங்கிமலை பகுதியில் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் உதயநிதி
பலத்த பாதுகாப்புடன் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 6.30 மணியளவில் திருச்சி வழியாக உதயநிதியை போலீஸார் தஞ்சாவூர் அழைத்து வந்தனர். ஆனால், திடீரென செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதியை அழைத்துச் சென்றனர்.
வேனில் காத்திருந்த உதயநிதி
அங்கு, தனது வழக்கறிஞர்கள் வந்தால்தான் காவல் நிலையத்துக்குள் வருவேன் என்று கூறிய உதயநிதி வாகனத்தை விட்டு இறங்காமல் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார். திமுக வழக்கறிஞர்கள் அங்கு வந்த பிறகு, வாகனத்தில் இருந்து உதயநிதி இறங்கி காவல் நிலையத்துக்குள் சென்றார்.
போலீசார் விசாரணை
தஞ்சாவூர் எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தினார். அப்போது, போலீஸாரின் கேள்விகளுக்கு உதயநிதி பதிலளித்தார்.
உதயநிதி விடுவிப்பு
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு 8.15 மணியளவில் உதயநிதியைப் போலீஸார் விடுவித்தனர்.
உதயநிதிக்கு முன்ஜாமின்
முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடந்த போது, “தஞ்சாவூரில் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்படுவார். நீதிமன்ற காவலுக்கு அனுப்புவது எங்கள் நோக்கமல்ல” என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதைப் பதிவு செய்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “உதயநிதியை விசாரணை முடிந்ததும் போலீஸார் இன்றே (நேற்று) விடுவிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினும் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
பரபரப்பான அரசியல் களம்
உதயநிதி கைது, விசாரணை, விடுவிப்பு, நீதிமன்ற உத்தரவு, திமுகவினர் மறியல், தவெகவினர் போராட்டம் என தமிழக அரசியல் களம் நேற்று மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
========