முதல்வர் வேட்பாளர்கள் : கொளத்தூரில் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், காரைக்குடியில் சீமான் வேட்புமனு தாக்கல்! பரப்புரை

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும், பெரம்பூரில் விஜய், காரைக்குடியில் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Stalin filed his nomination in Kolathur constituency, Vijay in Perambur, and Seeman in Karaikudi
Stalin filed his nomination in Kolathur constituency, Vijay in Perambur, and Seeman in Karaikudigoogle
2 min read

தமிழகத்தில் மனுத்தாக்கல் மும்முரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது. வரும் 6ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். முதல்நாளான இன்று பல்வேறு கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

முதல்வர் வேட்பாளர்களாக அறியப்படும் மூன்று பேர் தங்களின் வேட்பு மனுக்களை, போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்தனர்.

ஸ்டாலின் மனுத்தாக்கல்

அந்த வகையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார்.

அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

கொளத்தூரில் 4 முனைப்போட்டி

அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாதக சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் இங்கு போட்டியிடுகின்றனர்.

கொளத்தூரில் 2011ம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜய்

சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்கும் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

பெரம்பூரில் விஜய் போட்டி

அதன்படி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் இன்று மனுதாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் தவெக சார்பில் விஜய், திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ம .திலகபாமா, நாதகவின் வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2ம் தேதி விஜய் மனுத்தாக்கல் செய்கிறார்.

காரைக்குடியில் சீமான் மனுத்தாக்கல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார். சீமானுடன் அவரின் தாய் மற்றும் மனைவி கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர்.

நான்குமுனை போட்டி

காரைக்குடி தொகுதியில் நாதக சார்பில் சீமான், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இலவச வாக்குறுதிகள் பற்றி கேள்வி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம், ரூ.2500, ரூ.3000 தருவதாக தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர்.

படித்துவிட்டு வேலையில்லாதவனுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக, ரூ.4 ஆயிரம் தருவதாக சொல்பவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்.

டாஸ்மாக் - யாரும் வாக்குறுதி தரவில்லை

டாஸ்மாக் கடையை மூடுவதாக ஒருவருமே வாக்குறுதி அளிக்கவில்லையே. பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் இப்போதே உள்ளது.

இப்போது நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவீர்கள். கடன் வாங்கி நிறைவேற்றிய எந்த திட்டமாவது தரமாக உள்ளதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.

பெரம்பூரில் விஜய் பரப்புரை

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், “நம்மைப் பிடித்தவர்கள் உள்ள இடத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என நினைத்தேன்.

தமிழகமே எனக்குப் பிடித்த இடம்தான். எனவே, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம்.

தாய் வீட்டில் இருந்து பிரசாரம்

ஆனால் நம் வீட்டின் வாசலில் இருந்து, நம் தாய் வீட்டிலிருந்து தொடங்குவது போல், பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தேன், அதனால் இங்கு பெரம்பூரில் இருந்து தொடங்குகிறேன்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

போதைப் பொருள் புழக்கம் மிகுந்த, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, ஊழல் மிகுந்த தமிழகத்துக்கு ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சிதான் காரணம். இப்படிப்பட்ட ஆட்சி நடத்திய ஸ்டாலின் இத்தேர்தலோடு விடைபெறப் போகிறார்.

நம் வீட்டுப் பெண் பிள்ளைகள், இரவில் கழிவறை செல்லக் கூட முடியவில்லை, மூதாட்டியைக் கூட விட்டுவைப்பதில்லை. டீக்கடையில் டீ குடிக்கச் சென்றால் கூட போதை ஆசாமிகள் வெட்டு, குத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை

இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?, ( விஜய்யின் கேள்விக்கு இல்லை என தவெகவின ஆர்ப்பரித்தனர்).

ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் பாதுகாப்பு மீது அக்கறையில்லை. தன் குடும்பத்தின் சொத்தைப் பெருக்குவதில் தான் அக்கறை.

திமுகவை தூக்கி எறிவோம்

நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பில் நடந்துள்ள ஊழல் இளைஞர்கள் மீதான அநீதி. மக்களுக்குப் பாதுகாப்பு தர இயலாத, மக்கள் மீது அக்கறையில்லாத இந்த திமுக ஆட்சியைத் தூக்கி எறிவோம்.

விசில் ஊதி அனுப்பங்கள்

கொள்ளையடித்தப் பணத்திலிருந்து அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை, வாங்கிக் கொண்டு பதிலுக்கு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.

உங்கள் மகன், அண்ணன், தம்பி, பிள்ளை என நினைத்து எனக்கு வாக்களியுங்கள். எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள், வாய்ப்பு கொடுங்கள் “ என விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

மு.க. ஸ்டாலின் பேட்டி

வேட்புமனு தாக்கல் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், எத்தனை முனை போட்டி நிலவினாலும் திமுக கூட்டணிக்கு தான் சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் உற்சாக வரவேற்பு

அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்த ஜீப்பில் சாலை வலம் சென்றார். சாலையின் இருபுறமும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அதைத்தொடர்ந்து திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில் செய்யப்பட்ட சாதனைகள் அடங்கிய புத்தகத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

===========================

Stalin filed his nomination in Kolathur constituency, Vijay in Perambur, and Seeman in Karaikudi

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in