
பிரபலமடைந்து வரும் ஜோஹோவின் ‘அரட்டை’
Supreme Court Suggest To Use ZOHO's Arattai Messenger Chat App : 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட, ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. உள்நாட்டு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த குடிமக்களை வலியுறுத்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வலியுறுத்தலுக்கு பிறகு, அரட்டை செயலிக்கு மவுசு கூடி இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ஜோஹோ செயலிக்கு மாறி இருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஜோஹோ மெயிலுக்கு மாறி அசத்தி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் விசாரணை
இந்தநிலையில், தனது வாட்ஸ்அப் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டது குறித்து, டாக்டர் ராமன் குந்த்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தனிப்பட்ட தகவல் தொடர்புக்கு வாட்ஸ் அப்(WhatsApp) அவசியம் என்ற வாதங்களை முன்வைத்தார். இருப்பினும், ''இந்திய அரசியல் அமைப்பு கீழ், வாட்ஸ் அப் போன்ற தனியார் நிறுவனங்களை அணுக முடியாது'' என நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
அரட்டை செயலி நீதிமன்றம் அறிவுரை
தீர்ப்பின் போது கூறிய நீதிபதிகள், ”இன்றைய உலகில் டிஜிட்டல் தொடர்பு மிக முக்கியமானது. பயனர்கள் ஒரு சமூக வலை தளத்தின் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும். தனியாருக்கு சொந்தமான சேவைகளுக்கு உரிமை கோர முடியாது,எனத் தெரிவித்தனர்.
'வாட்ஸ் அப் பயன்பாடு அடிப்படை உரிமை அல்ல(WhatsApp is not Fundamental Right), உள்நாட்டு தயாரிப்பான ஸோகோவின் அரட்டை செயலியை(Arattai App) பயன்படுத்துங்கள்' என மனுத்தாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் படிக்க : Zoho: அரசு ஊழியர்கள் ஜோஹோ மெயிலுக்கு மாற்றம்: அசத்திய மத்திய அரசு!
கவனம் ஈர்க்கும் அரட்டை செயலி
சுதேசி செயலியான அரட்டைக்கு வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு இடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்து இருப்பது பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செயலி சமீபத்தில் இந்தியாவின் ஆப் ஸ்டோர்களில் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மற்ற சமூகவலைதளங்களை விஞ்சி முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
----