

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி
DMK Case on SIR Electoral Polls in Tamil Nadu : தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் கடந்த 4ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் மட்டுமின்று 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.
SIR-ஐ எதிர்த்து திமுக வழக்கு
இதை தொடக்கம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மழையை காரணம் காட்டிய திமுக
இந்த வழக்கு இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில், தமிழ்நாட்டில் தற்போது பருவ மழை காலம் என்பதால் எஸ் ஐ ஆர் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. குறிப்பாக மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் உள்ளிட்ட பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள்.
SIR - இப்போது வேண்டாம்
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். எனவேதான் எஸ்.ஐ.ஆர் நடத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல. லட்சக்கணக்கான படிவங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதற்குப் போதிய அவகாசம் இல்லை. தேர்தல் ஆணையம் போதிய அவகாசத்தை வழங்காமல் அவசர அவசரமாக மேற்கொள்வது பெருமக்களை பெருமளவுக்கு பாதிக்கும் என்று வாதிடப்பட்டது.
அதிமுக - இடையிட்டு மனு
தேர்தல் ஆணையம் தரப்பில்,உயர் நீதிமன்றங்களில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான மனுக்களை விசாரிக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த வழக்கில் அதிமுகவையும் இணைத்துக் கொள்ள கோரி இடையிட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை
இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, உயர் நீதிமன்றங்களில் எஸ்.ஐ.ஆர் குறித்து விசாரணை நடத்தக் கூடாது எனவும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
SIR - பணிக்கு தடையில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த நீதிதிகள், பணிகளை தேர்தல் ஆணையம் தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்து ஆணை பிறப்பித்தனர். அதிமுகவின் இடையிட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அம்மனுவை ரீட் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
==================