

Paramilitary forces will have to be deployed if encroachments in Meghamalai are not removed: Supreme Court
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் தேவை எனத் தமிழ்நாடு அரசு வாதத்தை முன்வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டன.
உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
மேகமலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம் பஞ்சு தோட்டம் முழுமையையும் கட்டாயம் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் பாதுகாப்புக்குத் துணை ராணுவப் படை அனுப்பப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்து, கட்டடங்களை முற்றிலும் இடித்து நிலங்களைக் கைப்பற்ற உத்தரவிட்டுள்ளது.
வனத்துறை குறைதீர்க்கும் கூட்டமும் விவசாயிகள் கோரிக்கையும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் துணை இயக்குநர் விவேக்குமார் பிரசாத் பி.யாதவ் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களுக்கு வனஉரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் என்றும், பட்டி பாஸ் வைத்திருக்கும் மாடு வளர்ப்போரின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கூடலூர் பகுதியில் யானைகளால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தினர்.
ஆக்கிரமிப்பாளர்களின் 3 வகைப்பாடு
செய்தியாளர்களிடம் பேசிய துணை இயக்குநர் விவேக்குமார் பிரசாத், மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பாளர்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வன நிலத்தில் வீடு மட்டும் உள்ளவர்கள் முதல் வகையாகவும், வீட்டுடன் வனநிலத்தை ஆக்கிரமித்தவர்கள் இரண்டாம் வகையாகவும், மலைப் பகுதிக்கு வெளியே வாழ்ந்துகொண்டு வனநிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள் மூன்றாம் வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.
முதல் பிரிவினருக்கு மாற்று வீடு மற்றும் மறுவாழ்வு
ஆக்கிரமிப்பாளர்களில் வன நிலத்தில் வீடு மட்டும் கட்டிக் குடியிருந்து வரும் முதல் பிரிவினருக்கு மாற்று வீடு உட்பட வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்தித் தர அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.
மேகமலை வனப்பகுதியில் ஏற்கனவே முறைப்படி பட்டா வைத்துள்ளவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என வனத்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏனைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வீட்டுடன் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் வெளியே வசதி இருந்துகொண்டு வன நிலத்தில் விவசாயம் செய்யும் ஏனைய ஆக்கிரமிப்பாளர்களைக் கட்டாயமாக வெளியேற்றுவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ரிசர்வ் வனப்பகுதிகளில் யாருக்கும் புதிதாக பட்டா வழங்கப்பட மாட்டாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
துனைநிலை ராணுவம் அனுப்பப்படும்
மேலும், மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் துணை நிலை ராணுவம் அனுப்பப்படும் என்றும் உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
======