

தமிழகத்தில் டாஸ்மாக் எனப்படும் அரசு நிறுவனம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படும் புகார் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆன்லைனில் மதுபான விற்பனை
இதற்கு முடிவு கட்டும் விதமாக, ஆன்லைனில் மதுபான விற்பனைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆன்லைனில் மதுபானம் வாங்குவது குறித்த விளக்க விடியோவை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தனி செயலி, இணையதளம்
அதன்படி, மதுபான விற்பனைக்கு தனி செயலி மற்றும் இணைதளம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்து இருக்கிறது.
தேவையானதை தேர்வு செய்யலாம்
ஆன்லைன் முன்பதிவுக்கான இணையதளத்தில் நுகர்வோர் முதலில் தங்கள் அருகில் உள்ள கடையை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் தங்களுக்கு தேவையான மது வகையை தேர்வு செய்ய வேண்டும்.
கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்
பணம் செலுத்தும் பக்கத்தில் செல்போன் எண் கொடுத்து ஓடிபி பெற்று, அதை பதிவு செய்து, பணம் செலுத்த வேண்டும். இதையடுத்து, கியூஆர் குறியீடு கொண்ட ரசீது வரும், அதை நுகர்வோர் டவுன்லோட் செய்து, முன்பதிவு செய்த கடைக்கு சென்று கடை பணியாளரிடம் காண்பிக்க வேண்டும்.
சரியான இருந்தால் மதுபானம் வழங்கப்படும்
கடை பணியாளர் கடையில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்வோரின் ரசிதை ஸ்கேன் செய்வார், பின்னர் நுகர்வோர் பதிவு செய்து வந்த மதுபானத்தை எடுத்து அதையும் ஸ்கேன் செய்வார்,
இரண்டும் சரியாக உள்ளது உறுதியான பிறகு ரசீதை பிரின்ட் செய்யும் பக்கம் வரும். அதில் ரசீதை பிரின்ட் செய்து மதுபானத்தை நுகர்வோரிடம் வழங்குவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாபஸ் பெற அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் ”தமிழகத்தில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4,048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன. அவற்றின் விலை எவ்வளவு என்பதை கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும்.
மது வணிகம், மதுப் பழக்கம் அதிகரிக்கும்
இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது அரசுக்கு பெருமை சேர்க்காது.
உடனே திரும்ப பெறுக
எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
=====