

உடல் உறுப்பு தானம்
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத்துறையிலும் தலைசிறந்த முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுப்பணிகளை முறைப்படுத்த தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மாற்று சிகிச்சையிலும் சாதனை
தேசிய அளவில் தமிழ்நாடு இதய மாற்று சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையில் முதலிடம் வகிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
தேசிய அளவில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு இதுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தேசிய விருதை பெற்றுள்ளது.
தமிழகத்துக்கு 10வது முறை தேசிய விருது
டெல்லியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 16வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் முதன்மையாக சிறந்து விளங்குகிற மாநிலத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மத்திய அரசின் விருது
இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் உறுப்பு தானம் செய்து முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குவதை பாராட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தமிழகத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது.
ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் சிறந்த மாநிலத்திற்கான விருதை வழங்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விருதினை பெற்றுக் கொண்டார்.
உடல் உறுப்பு தானம் கௌரவிப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த சபரீஷ் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2025ம் ஆண்டில் அதிகளவில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்பு கொடைகளை மேற்கொண்ட திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் வினோத்குமாருக்கு சிறந்த உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் - இரண்டு வகை
உடல் உறுப்பு தானங்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உயிருள்ளவரிடமிருந்து உறுப்பு தானம், மற்றொன்று இறந்தவர் உடலிலிருந்து உறுப்பு தானம்.
உயிருள்ளவரிடமிருந்து உறுப்பு தானம் என்பது ஆரோக்கியமாக உயிருள்ள ஒருவரிடமிருந்து ஒரு உறுப்பை மீட்டெடுத்து, உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் இடமாற்றம் செய்யப்படுவதாகும்.
இதற்கு மண்டல வாரியாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அங்கீகார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் உடல் உறுப்பு தானம் பெறுபவர் மற்றும் தானம் அளிப்பவர் ஆகிய இருவரையும் ஆய்வு செய்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குகிறது.
இறந்தவரிடமிருந்து உடல் உறுப்பு தானம் என்பது ஒரு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ குழுவால் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்படும் உறுப்பு தானமாகும்.
தானமாக பெறப்படும் உறுப்புகள்
இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், குடல் மற்றும் கணையம் ஆகிய உறுப்புகள் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாக பெறப்படுகின்றன.
தமிழக அரசு மரியாதை
மூளைச்சாவு அடைந்த பிறகு உறுப்புகளை தானம் அளித்தவர்களுக்கு அவர்களது இல்லத்திற்குச் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இறுதி மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது.
2023 செப்டம்பர் மாதம் முதல் 2026 ஜூலை மாதம் இறுதி வரை தமிழ்நாட்டில் 798 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
உறுப்பு தானங்களின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் அக்டோபர் 2008 முதல் ஜூலை 2026 வரை 2,490 உறுப்பு கொடையாளர்களிடமிருந்து 14,532 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
விலை மதிப்பிட முடியாத தானங்கள்
இதில் 1,027 இதயம், 1,071 நுரையீரல், 2,204 கல்லீரல், 4,394 சிறுநீரகம், 49 கணையம், 39 சிறுகுடல், 4 வயிறு மற்றும் 9 கைகள் என 8,797 முக்கிய உறுப்புகளும், 1,107 இதய வால்வு, 3,677 கார்னீயாஸ்...
395 தோல், 2 ரத்த நாளங்கள், 525 எலும்புகள், 26 முதுகெலும்பு மற்றும் டிஸ்க் திசுக்கள், 3 வயிற்று மடல் என 5,735 இதர உறுப்புகள் மற்றும் திசுக்கள் என மொத்தம் 14,532 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
===========