
மத்தியில் தொடர்ந்து 3வது முறை ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தில் பாஜகவால் வலுவாக காலூன்ற முடியவில்லை. மக்களிடம் செல்வாக்கு இருந்தாலும், அது வாக்காக மாறி வெற்றியை ஈட்டித் தருவதில்லை.
இதை கருத்தில் கொண்டுதான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருக்கிறது. மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகஸ்டில் 17ல் முதல் மாநாடு :
இந்தநிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழக பாஜகவின் முதல் மாநாடு நெல்லையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு நாம் சுமை அல்ல, பலம் என்பதை என்பதை காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. நெல்லையில் மாநாடு நடத்துவதன் மூலம், மீண்டும் பாஜக குறி என்ற ஐயமும் எழுந்துள்ளது.
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் :
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் மூலமாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தமிழக சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். தவெக தரப்பிலும் ஆகஸ்ட் மாதம் மாநாடும், செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களப்பணியில் பாரதிய ஜனதா :
இந்த நிலையில் பாஜக தரப்பிலும் தேர்தல் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மதுரையில் நடந்த முருகன் மாநாடு பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தற்போது அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை பாஜக மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அதன்படி செங்கல்பட்டில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ”ஆகஸ்ட் 17ல் தமிழக பாஜகவின் முதல் மாநாடு நெல்லையில் நடக்கும் என்று அறிவித்தார். அதன்பின் ஒவ்வொரு 2 மாதங்களிலும் ஒரு மாநாட்டை பாஜக தரப்பில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் விஜய்க்கு அதிகரித்து வரும் ஆதரவு, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஆகிய பின்னடைவை சரி செய்ய, ஒவ்வொரு மாதமும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தெருமுனை பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
=====