

தமிழக சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒருபுறம் திமுக கூட்டணி, மறுபுறம் அதிமுக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டிக்கு வாய்ப்பு உள்ளது.
கூட்டணி, தொகுதி பங்கீடு
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் ஆகிய பணிகளுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருக்கிறது.
சென்னையில் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் இன்று சென்னை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பாஜக மையக்குழு கூட்டம்
இதைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் சென்ற பியூஷ் கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பாஜகவின் வளர்ச்சி, கட்சிப் பணிகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அதிமுகவுடன் தொகுதி பங்கீடு
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பியூஷ் கோயல் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கிறார். அப்போது பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதிமுகவிடம் தொகுதி பட்டியல்!
பியூஷ் கோயலை சந்திக்கும் முன்பு, அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமியும் விவாதித்து இருக்கிறார். எனவே, எடப்பாடி - கோயல் சந்திப்பு முக்கிய முடிவுகள் எடுக்க காரணமாக அமையும் என தெரிகிறது.
அதேசமயம், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை பியூஷ் கோயல் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.