
கம்பன் கழக விழா :
சென்னையில் ஆழ்வார் மைய்யம் சார்பில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில், வைரமுத்துவுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வைரமுத்து இந்துக் கடவுளான ராமர் குறித்து தவறான கருத்தினை தெரிவித்தார்.
ராமர் குறித்த கம்பரின் வரிகள் :
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திகைத்தனை போலும் செய்கை' என கம்பரின் வரிகளை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, 'திகைத்தல் என்ற வார்த்தைக்கு, புத்திசுவாதீனமற்றவர் என்று பொருள்.
'அதனால், புத்திசுவாதீனமின்றி வாலியை கொன்று விட்டார் ராமர் என கூறி, ராமன் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக்கிறார். இந்திய தண்டனைவியல் சட்டம் 84ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்கிற குற்றத்துக்கு தண்டனை இல்லை' என்று கூறியுள்ளார்.
ராமர் மீது வைரமுத்துவுக்கு வன்மம் :
திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் அற்றவர் என்ற பொருளை, புத்தியுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். திகைத்தல் என்றால், வியப்படைதல், தடுமாறுதல், மயங்குதல் என்றே பொருள். வேண்டு மென்றே ராமரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு வைரமுத்து அவதுாறாக பேசியுள்ளார்.
பொருள் தெரியாதவர் கவிப்பேரரசா? :
திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது திகைப்புக்குரியது. சோழ மாமன்னர்களின் முன்னோர் ராமர் என சோழர் கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதனால், ராமரை திட்டமிட்டு விமர்சித்து இருக்கிறார் வைரமுத்து.
வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் :
அவரது இந்தப் பேச்சு இந்துக்களையும், குறிப்பாக ராமரை வழிபடும் அனைவரையும் மனம் புண்படச் செய்து இருக்கிறது. தமிழர்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே, தமிழர்களிடம் வைரமுத்து பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” என்று அஸ்வத்தாமன் வலியுறுத்தி இருக்கிறார்
==============