

சிறப்பு தீவிர திருத்த பட்டியல்
SIR Form Fill Up in Tamil Nadu : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதேபோன்று, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கமும் தேர்தலை எதிர்கொள்கின்றன.
தமிழகத்தில் SIR பணிகள்
இந்தநிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக SIR படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்ப பெறப்படுகின்றன.
தலைமை தேர்தல் அதிகாரி அறிவுரை
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் பொருட்டு, கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்த வாக்காளர்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் SIR நிலவரம்
சிறப்புத் திருத்தப் பணிக்காக 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மற்றும் 7,234 மேற்பார்வையாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
6.23 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள்
தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 6.23 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மாவட்டத் தேர்தல் அலுவலர்களால் அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்
கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக் கொண்ட வாக்காளர்கள், கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க, டிசம்பர் 4, 2025 வரை காத்திருக்காமல், பூர்த்தி செய்த படிவங்களை உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 9 வரைவு வாக்காளர் பட்டியல்
2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயரையோ அல்லது உறவினரின் பெயரையோ கண்டறிய இயலாத நிலையில், டிசம்பர் 4, 2025க்குள் படிவத்தை ஒப்படைத்தால், அவரது பெயர் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
படிவம் கொடுக்கா விட்டால் பெயர் இருக்காது
டிசம்பர் 4, 2025-க்குள் படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது. மேலும், மூன்று முறை வீடு தேடிச் சென்றும் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 9 முதல் பெயர் சேர்ப்பு
டிசம்பர் 9, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஆட்சேபனை தெரிவிக்க டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை படிவம் 6ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 31, 2026 வரை, விண்ணப்பித்த வாக்காளர்களின் தகுதியை ஆய்வு செய்த பிறகு, தேவைப்பட்டால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
பிப். 7, 2026 இறுதி வாக்காளர் பட்டியல்
அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும். வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.
=========================