

Tamil Nadu government files a case in the Supreme Court to secure its due share of Cauvery water on a proportional basis
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாகச் சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தற்போது கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ள நிலையிலும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 3) வழக்குத் தொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரங்கள்
கடந்த ஜூலை 28 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 139-வது கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரையிலான 15 நாட்களுக்குப் பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது.
ஜூலை 30 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது.
ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு வெறும் 158 முதல் 550 கன அடி நீர் மட்டுமே வந்து சேர்ந்தது.
அணைகளில் போதுமான நீர் இருப்பு
கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு விவரம் (ஆகஸ்ட் 3 நிலவரப்படி)
கிருஷ்ணராஜ சாகர் : 23.078 டி.எம்.சி
கபினி: 18.610 டி.எம்.சி
ஹேமாவதி/ஹாரங்கி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு மொத்தப் பயன்பாட்டு நீர் இருப்பு: 67.517 டி.எம்.சி
அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய நீரைத் திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.
மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய விகிதாச்சார நீர் 26.954 டி.எம்.சி ஆகும். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 4.536 டி.எம்.சி நீரே மிகவும் குறைவான அளவாகும்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நியாயமான நீரைப் பெறவும், கர்நாடகாவின் பிடிவாத போக்கிற்கு தீர்வு காணவும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உச்ச நீதிமன்றத்தை அணுகித் தக்க உத்தரவைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
=====