

மழைநீர் சேகரிப்பு முறைகள்
தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டமைத்தல், ஏற்கனவே உள்ள அமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் முறையாகப் பராமரித்தல் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை
வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மழைநீர் சேகரிப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
“தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் மழைநீர் சேகரிப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒருங்கிணைப்பு துறையாகச் செயல்பட்டு வருகிறது.
ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
இதற்காக மாநிலத் தலைமைச் செயலாளர் தலைமையில், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மழைநீர் சேகரிப்புப் பணிகளை வழிநடத்துவதுடன், அவற்றைக் கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்ளும்.
மழைநீர் சேகரிப்பு கட்டாயம்
குறிப்பிட்ட வகையான கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் மொட்டை மாடிகளில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மழைநீரை சேமிக்க வேண்டும்
கூரையிலிருந்து வெளியேறும் மழைநீரை கூழாங்கல் மற்றும் மணல் அடுக்குகளைக் கொண்ட வடிகட்டி அல்லது பொருத்தமான சிறப்பு வடிகட்டி மூலம் சுத்திகரித்து, உடனடிப் பயன்பாட்டுக்காகத் தொட்டிகளில் சேமிக்க வேண்டும்.
மழைநீரை வடிகட்டிக்குள் அனுப்புவதற்கு முன்பு, கூரையில் படிந்திருக்கும் தூசி, இலைகள் மற்றும் பிற கழிவுகளை அகற்றும் வகையில் முதல் நீரோட்டத்தை வெளியேற்றும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
உபரி நீரை வீணாக்க கூடாது
சேமிப்புத் தொட்டி நிரம்பிய பிறகு வெளியேறும் உபரி நீரை திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் அல்லது பிற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்குத் திருப்பிவிட வேண்டும்.
அதேபோல், நடைபாதைகளில் தேங்கும் மழைநீரை, ஊடுருவல் கிணறுகள் மற்றும் துளைக் குழாய்களைக் கொண்ட ஊடுருவல் அகழிகள் வழியாக நிலத்தடிக்குள் செலுத்த வேண்டும்.
நிலத்தடி நீர் செறிவூட்டல்
100 சதுர மீட்டர் (சுமார் 1,000 சதுர அடி) பரப்பளவு கொண்ட மாடியில், தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழைப்பொழிவான 971 மி.மீட்டர் மழை பெய்தால் சுமார் 97,000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதில் 70 சதவீதத்தைத் திறம்படச் சேகரிக்க முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு சுமார் 68,000 லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடியும்.
பயன்படாத கிணறுகளையும் பயன்படுத்தலாம்
பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளிக் கிணறுகளையும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தலாம். இதற்காகக் கிணறுகளைத் தூர்வாரிச் சுத்தம் செய்து, உரிய மூடிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும். பாக்டீரியா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கத் தேவையான குளோரினேஷன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
போர் வெல்களிலும் மழைநீர் சேகரிப்பு
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளிலும் வடிகட்டப்பட்ட கூரை மழைநீரைச் செலுத்தலாம். இதற்காக 0.5 மீட்டர் நீளம், 0.75 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்ட வடிகட்டி அறையை அமைத்து, அதன் வழியாகச் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை ஆழ்துளைக் கிணற்றுக்குள் அனுப்ப வேண்டும்.
மணற்பாங்கான பகுதிகளில் நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதற்கு ஊடுருவல் கிணறுகளையும் அமைக்கலாம். இவை 1 மீட்டர் விட்டமும், 3 முதல் 5 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்க வேண்டும். சுமார் 1,000 சதுர அடி கூரைப்பகுதி கொண்ட தனி வீட்டுக்கு ஒரு ஊடுருவல் கிணறு அமைக்கலாம்.
தொழிற்சாலைகளில் உறிஞ்சுக் கிணறுகள்
செங்கல் சுவர் அல்லது சிமென்ட் வளையங்களால் அமைக்கப்படும் இக்கிணறுகளைத் துளையிடப்பட்ட மூடியால் பாதுகாப்பாக மூட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இவற்றைத் தூர்வாரிச் சுத்தம் செய்ய வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூரை மழைநீரைச் சேமிப்புத் தொட்டிகளில் சேகரிக்கலாம். அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் வளாகத்தின் பிற பகுதிகளில் தேங்கும் மழைநீரை உறிஞ்சு அகழிகள், ஊடுருவல் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன வளாகங்களில் எல்லைப் பகுதிகளில் உறிஞ்சுக் கிணறுகள் மற்றும் ஊடுருவல் அகழிகளை அமைக்க வேண்டும். வளாகத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீரைச் சேகரித்து நிலத்துக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சுக் குட்டைகளையும் ஏற்படுத்தலாம்.
பொது இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு
சாலைகள், பூங்காக்கள் மற்றும் பொதுஇடங்களில் மழைநீர் வடிகால்கள் மூலம் கிடைக்கும் நீரைச் சேகரித்து, ஸ்பாஞ்ச் பூங்காக்கள், மழைத் தோட்டங்கள் மற்றும் ஊடுருவல் அகழிகள் வழியாக நிலத்தடி நீர் செறிவூட்டப்பட வேண்டும்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய அவற்றைப் பழுதுபார்த்து, பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய பராமரிப்பு கட்டாயம்
நீரைச் சேகரிக்கும் கட்டமைப்புகளிலும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, நீர்த்தேக்கத் திறனை மீட்டெடுக்க வேண்டும்.
அரசு நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு
அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது வளாகங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
அவர்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளின் செயல்பாட்டைக் கண்காணிப்பதுடன், தேவையான தூர்வாருதல் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்குக் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
கட்டட விதிகளின்படி மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=============