

17வது சட்டசபை கூட்டத்தொடர்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, 17வது சட்டசபை அமைக்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். தவெக அரசு ஆட்சிக்கு வந்தநிலையில், முதல்வரானார் விஜய்.
ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டம்
இந்தநிலையில், 17வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் அர்லேகர் நாளை உரை நிகழ்த்த இருக்கிறார்.
ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் அல்லது புதிய அரசு பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு.
ஆளுநருக்கு சபாநாயகர் அழைப்பு
அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். ஆளுநர் உரையும், தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னாள் ஆளுநர் வெளிநடப்பு
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அப்போது ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
2023 ஆம் ஆண்டு, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை.
பாதியில் வெளியேறிய ஆளுநர்
இதனையடுத்து, அந்த வார்த்தைகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.
வெளியேறிய ஆளுநர் ரவி
இதே போன்று, 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், அந்த உரையை அப்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்தார்.
தொடர்ந்து வெளிநடப்பு செய்த ஆளுநர்
கடந்தாண்டும், முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பேரவை மரபுகள் - சபாநாயகர் உறுதி
இத்தகைய சூழலில் புதிய சட்டசபையின் முதல் தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. கடந்த கால பேரவை மரபுகள் முறையாக பின்பற்றப்படும் என்று தற்போதைய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நாளை கூட்டம் எகிறும் எதிர்பார்ப்பு
எனவே, பேரவை மரபுகளை ஆளுநர் அர்லேகர் ஏற்று தனது உரையை வாசிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
====================