

தமிழகத்தில் உப்பளத் தொழில்
தமிழகத்தில் உப்பளத் தொழில் என்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உப்பு உற்பத்தியில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கு வெயில் மிகவும் அவசியம். ஆனால் மழைக்காலம் தொடங்கியதும் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் வருமானம் முடங்கும் சூழல் ஏற்படுகிறது.
மழைக்காலம் வேலையில்லை
இந்தநிலையில், மழைக்காலங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானத்தை இழக்கும் உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு
இதுவரை ரூ.5,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ஆண்டுக்கு ரூ.7,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
23,979 தொழிலாளர் பயன்பெறுவர்
இதன் மூலம் 2026-2027ஆம் ஆண்டில் மட்டும் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். தொழிலாளர்களின் குடும்பச் செலவுகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி இருக்கிறது.
அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்காது
இந்த நிவாரணத் தொகை தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவாக வழங்கப்படும் உதவித்தொகை கிடையாது. குறிப்பிட்ட தகுதியுடைய உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
பதிவு செய்து இருந்தால் மட்டுமே நிவாரண தொகை
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர் குடும்பங்களே இந்தத் திட்டத்தின் பயனாளிகள் ஆவர்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரமே நோக்கம்
மழைக்காலங்களில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத காரணத்தால் வருமானம் பாதிக்கப்படும் பதிவு செய்த தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, உப்பளத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது நல வாரியப் பதிவு தொடர்பான விவரங்களைச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
பேரவையில் அறிவிப்பு
சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையின்போது, உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
முதல்வர் விஜய் உத்தரவு
இதனைத் தொடர்ந்து, தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவின் அடிப்படையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
========