

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள்
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க அழைப்பதில் நிலவும் தாமதம் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
திமுக மற்றும் இடதுசாரிகளின் நிலைப்பாடு
தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இது குறித்துக் கூறுகையில், தவெக ஆட்சி அமைப்பதில் திமுக எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் ஒரு அரசியலமைப்புச் சிக்கல் உருவாவதையோ அல்லது உடனடியான மறுதேர்தல் திணிக்கப்படுவதையோ திமுக விரும்பவில்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூ.மாநில செயலாளர்
மறுபுறம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், நடிகர் விஜய் அவர்கள் பதவியேற்பதற்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுப்பது ஜனநாயக ரீதியாக ஏற்புடையது அல்ல என்று விமர்சித்துள்ளார்.
ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கண்டனம்
விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் , தமிழக அரசியலில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு விஜய்க்குப் போதுமான கால அவகாசத்தை ஆளுநர் வழங்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மாண்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
இதே கருத்தை வலியுறுத்திய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
"பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ராஜ் பவனில் அல்ல" என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புப் பாதுகாப்பும் காங்கிரஸும்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆளுநர்களை வைத்து பாஜக அரசியல் செய்வதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெகவை முறைப்படி ஆட்சி அமைக்க அழைக்காதது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தமிழக ஆளுநர் விஜயை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்துவது முறையற்றது என்று சிபிஐ(எம்) விமர்சித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும், மக்களின் தீர்ப்பை மதித்து தவெக ஆட்சி அமைக்க வழிவிட வேண்டும் என்பதையும், ஆளுநரின் தலையீடு இன்றி ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றன.
====