

தைப்பூச திருவிழா 2026 :
Thaipusam 2026 Festival, Special Buses : முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் தைப்பூசம், நாளை மறுநாள் ( பிப்.1, ஞாயிற்றுக்கிழமை ) கொண்டாடப்படுகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் சென்று வழிபாடு செய்வார்கள்.
தைப்பூசம் - சிறப்பு பேருந்துகள்
எனவே, அவர்களின் வசதிக்காக சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பிற இடங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சுமார் 1205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்
இதையொட்டி சென்னை கிளம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 360 பேருந்துகளும், சனிக்கிழமை 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்
இதேபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை திரும்பவும் கூடுதல் பேருந்துகள்
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
=================