
தேர்தலுக்கு ஆயத்தமாகும் தவெக :
Actor Vijay Launch My TVK App : விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. விழுப்புரத்தில் கடந்த ஆண்டு முதல் மாநாட்டை நடத்தி காட்டிய விஜய், ஆகஸ்டு 25ம் தேதி மதுரையில் 2வது மாநில மாநாட்டை(TVK 2nd Madurai Manadu) நடத்துகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் என 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார் விஜய். யாருடன் கூட்டணி எனக் கூறாமல், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில், தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.
உறுப்பினர் சேர்க்கையில் தவெக மும்முரம் :
கட்சியை வலுப்படுத்தும் வேலையில் களமிறங்கியுள்ள விஜய் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். ஓராண்டிற்கு முன்பே இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய விஜய், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை நடத்தினார். My TVK App லிங்க் மூலம் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து வந்த நிலையில் தற்போது புதிய செயலியை கட்சி நிர்வாகிகளுக்காக விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
’மை டிவிகே’ செயலி அறிமுகம் :
கட்சி உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தும் வகையில், மை டிவிகே’ செயலியை தமிழக வெற்றிக் கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். குடும்பம் குடும்பமாக பொதுமக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களாக சேர்க்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும்.
2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை :
இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கு 2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை விஜய் நிர்ணயித்துள்ளார். இந்த My TVK App செயலியின் Access மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் அதில் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளலாம்.
நவீன தொழில் நுட்பத்துடன் தவெக செயலி :
ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம்(Jio Mapping) இணைக்கப்பட்டுள்ளதால் வேறு இடத்திலிருந்து உறுப்பினராக இணைக்க முடியாதவாறு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகிகள் பொதுமக்கள் இல்லத்திற்கு சென்றால்தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள முடியும். இந்த செயலியில் உறுப்பினர் சேர்க்கை மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் நபர்கள், கட்சியில் சேராமல் வெளியே இருந்து ஆதரவு தர நினைப்பவர்கள் போன்ற விவரங்களை வாக்குச்சாவடி முகவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
=====