

PTR temporary break from politics
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
தமிழகத்தின் முன்னாள் நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்காலிக ஓய்வு அறிவிப்பு
அதில், அடுத்த தேர்தல் வரை மக்கள் பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, பொது வாழ்க்கையிலிருந்து சில காலம் தற்காலிகமாக ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
பத்தாண்டு கால அரசியல் பயணமும் இலக்குகளும்
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வெளிநாட்டுப் பணியைத் துறந்து மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது தொடக்கக்கால தனிப்பட்ட மூன்று இலக்குகளைப் பெருமளவில் அடைந்துவிட்டதாகத் திருப்தி தெரிவித்துள்ளார்.
நீதிக்கட்சியின் சமூக நீதி வரலாற்றை உலகிற்கு உணர்த்துவது, மதுரை மக்களுக்கான தனது முன்னோர்களின் சேவையைத் தொடர்வது மற்றும் குடும்பத்தின் நற்பெயரைக் காப்பது ஆகியவையே அந்த நோக்கங்களாகும்.
முற்றுபெறாத திட்டங்கள் குறித்த வருத்தம்
இருப்பினும், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தான் நினைத்த சில சீர்திருத்தங்களையும், மதுரை நகருக்காகத் திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில்,
முக்கிய பணிகளை முழுமையாக முடிக்க முடியவில்லை
புதிய பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் மத்திய சிறைச்சாலையை நகருக்கு வெளியே மாற்றுவது போன்ற முக்கியப் பணிகளையும் முழுமையாக முடிக்க இயலவில்லை என்று அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் தனது 60 வயதில் சர்வதேசக் குடிமகனாக வாழவே திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் விடுபட்ட பணிகளை முடிக்கவே 2026 தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் புத்துணர்ச்சி
கடந்த பத்தாண்டுகளாக இரவு-பகல் பாராமல் உழைத்ததால், தற்போது கிடைத்துள்ள ஓய்வு காலத்தில் சில வாரங்கள் சாதாரண குடிமகனாக வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
புத்தகப் பணிகளை தொடர திட்டம்
அமைச்சர் பதவியில் இருந்தபோது நேரமின்மையால் மறுக்கப்பட்ட சர்வதேசச் சொற்பொழிவு அழைப்புகளை ஏற்கவும், 'ஹார்பர் காலின்ஸ்' நிறுவனத்திற்காகத் தான் எழுதவுள்ள புத்தகப் பணிகளை முடிக்கவும் இந்த இடைவெளியைப் பயன்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மக்களுக்கும் கட்சித் தலைமைக்கும் நன்றி
60 வயதை எட்டியுள்ளதால் தனது உடல்நலனில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியுள்ள அவர், தமக்கு ஆதரவளித்த மதுரை மத்திய தொகுதி மக்களுக்கும் கட்சித் தலைமைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக மாற்றத்திற்கான தனது ஆர்வம் குறையவில்லை என்றும், விரைவில் புதிய ஆற்றலுடன் மீண்டும் வருவேன் என்றும் அவர் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
=====