

Thaimaman Thanga Mothiram Thittam : சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் தவெக ஆட்சிக்கு வந்தால், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தவெக தேர்தல் வாக்குறுதிகள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில், வாக்குறுதி அளித்த திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டு வருகிறது.
“தாய் மாமன் தங்க மோதிரம்”
அந்த வகையில் பெண்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்த “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்திற்கு டெண்டர் கோரும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு டெண்டர்
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 22 கேரட் மற்றும் 916 ஹால்மார்க் சான்றிதழ் உடன் கூடிய தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
ஒரு கிராம் எடையில் மோதிரங்கள்
ஒரு கிராம் எடையில் மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 மோதிரங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் விவரங்கள் வெளியீடு
* டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 17 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* டெண்டர் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று நிவர்த்தி செய்யலாம்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்பிக்க வேண்டும்.
*அதே நாளில் நண்பகல் 12 மணி முதல் டெண்டர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.
* மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள tntenders. gov. in மற்றும் tnmsc. tn. gov. in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-----------------------