

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021ம் ஆண்டு நடைபெற்று இருக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தப்பணி தள்ளிப் போனது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும்.
தமிழகத்தில் இன்று முதல் கணக்கெடுப்பு
அந்த வகையில், தமிழகத்தில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீடு மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு, ஆகஸ்ட் 1ம் தேதியான இன்றுமுதல் ஆகஸ்ட் 30ம் தேதி நேரடியாக நடைபெறவுள்ளது.
டிஜிட்டல் விவரங்கள், 33 கேள்விகள்
அரசு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, டிஜிட்டல் முறையில் 33 கேள்விகள் கொண்ட தகவல்களை சேகரிப்பார்கள். ஏற்கனவே, பொதுமக்கள் இணையம் வழியாக தங்களின் விவரங்களை ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை பதிவு செய்யவும் வசதி வழங்கப்பட்டது.
2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை தொடங்கி இருக்கிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
களப்பணியில் 1.6 லட்சம் பேர்
இந்த கணக்கெடுப்பில் மாநில அரசின் பொதுத்துறை வருவாய்த்துறை நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் , நகராட்சி மாநகராட்சி ஆணையர் முதல் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சுமார் 1.6 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்பார்கள்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
வீடு வீடாக வந்து விவரங்களை சேகரிக்கும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாநில சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் வலுவான கொள்கை உருவாக்கவும் திட்டமிடங்களுக்கும் இந்த துல்லியமான தரவு சேகரிப்பு மிக முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் 33 கேள்விகள்
கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்படும். வீடுகளின் நிலை ,குடிநீர், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள் ,கழிப்பிட வசதி, கணினி போன்ற வசதிகள் வீட்டின் உரிமை (வாடகை வீடா அல்லது சொந்த வீடா) , குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ,வாகனங்கள், கைப்பேசி உள்ளிட்ட பல விபரங்கள் கேட்கப்படும்.
கைப்பேசி செயலி வாயிலாக தரவுகள் சேகரிப்பு
தரவுகளின் துல்லிய தன்மையை உறுதி செய்வதற்காக காகித பதிவேடுகளுக்கு பதிலாக நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க பிரத்தியேக கைப்பேசி செயலிகள் பயன்படுத்தப்படும்.
ஒரு கணக்கெடுப்பாளர் 200 முதல் 250 வீடுகளுக்கோ அல்லது 800 முதல் 900 மக்கள் தொகை உள்ள பகுதிக்கு பொறுப்பாளராக இருப்பார்.
2027 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, தொழில், இடம்பெயர்வு, சாதிவாரி விவரங்கள் உள்ளிட்ட சமூக-பொருளாதாரத் தரவுகள் சேகரிக்கப்படும்.
தரவுகளுக்கு 100% பாதுகாப்பு
பொதுமக்கள் அளிக்கும் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், கைப்பேசி எண் கணக்கெடுப்பு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அரசு உறுதியளித்து உள்ளது.
======================