

தூய்மைக்கு முன்னுரிமை
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாடு முழுவதும் தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருது.
தேர்வு செய்யும் முறை
இதை ஊக்குவிக்கும் விதமாக, வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பிடப் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு உள்பட 10 முக்கியப் பிரிவுகளின் கீழ் 43 அம்சங்கள் அடிப்படையில் சிறந்த தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
மத்திய அரசு விருது
அப்படி தேர்வாகும் நகரங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2025-26ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் அல்லிநகரம்
தமிழகத்தில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தேனி அல்லிநகரம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
தமிழகத்தில் தூய்மையான நகரமாகத் தேர்வு செய்யப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சிக்கான விருதை, நகராட்சி ஆணையர் பார்கவியிடம் குடியரசுத் தலைவர் வழங்கினார்.இந்த அங்கீகாரம் தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4,751 நகரங்களில் ஆய்வு
மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நாடு முழுவதும் 4,751-க்கு மேற்பட்ட நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட 43 அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.
இவற்றில் 30 நகரங்களுக்கு ‘மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கும் தூய்மையான நகரம்’ என்ற பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டது.
தேசிய அளவில் நவிமும்பை முதலிடம்
இந்த ஆய்வில் தேசிய அளவில் தூய்மையான நகரமாக நவிமும்பை முதலிடத்தைப் பிடித்தது. குஜராத்தின் சூரத் இரண்டாம் இடம் இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றாம் இடத்தையும் பிடித்தன. அதேபோல் தமிழக அளவில் தேனி அல்லிநகரம் நகராட்சி முதலிடத்தைப் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளது.
===