
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
இந்துத்துவா எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு கொள்கையில் விசிக தலைவர் திருமாவளவன் உறுதியாக இருந்தார்.
எப்போதும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அவர், சிலைகள் இருக்கும் கோயில்களுக்கு செல்ல மாட்டேன் என்றும் ஒருமுறை கூறி இருந்தார்.
ஆனால், மக்களவை தேர்தலின் போது சிதம்பரம் கோயிலுக்கு சென்றிருந்தார்.
பிரசாரத்தின் போது வேறு சில கோயில்களுக்கும் அவர் சென்றார்.
திமுக கூட்டணிக்கு பாமக வரலாம், 2026ல் காட்சிகள் மாறலாம் என்று கூறப்படும் நிலையில், திருமாவளவனும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனை அவர் சந்தித்து பேசியது, அரசியல் அரங்கில் பேசு பொருளானது.
திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம், ஆனால் அங்கு பாஜக இருக்கிறது என்று அவர் பேசியதும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தச்சூழலில் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று அவர் வழிபட்டார்.
திருமாவின் இந்த திடீர் போக்கு தமிழக அரசியல் அரங்கில் புதிய யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அவசியம் ஏற்பட்டால் அவர் அதிமுக கூட்டணிக்கு வருவார். அரசியலில் எதுவும் நடக்கலாம், அதை வியப்பாக பார்க்க முடியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
====